இஸ்ரேல் போர்: ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்
|இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
சென்னை,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தின. நேற்று (அக்.7) காலை முதல் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் இடையேயான மோதலில் இதுவரை 530க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் 2வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால், இஸ்ரேல் - காசா இடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஜெருசேலம் சென்றுள்ள பாதிரியார்கள் நலமுடன் இருந்தாலும், ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.