விழுப்புரம்
இழப்பீட்டு தொகை வழங்காமல் 3 ஆண்டுகளாக அலைக்கழிப்பு
|விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலைக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் 3 ஆண்டுகளாக அலைக்கழிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார்
விழுப்புரம்
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணிக்காக நிலத்தை கொடுத்த கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தின் வழியாக செல்லும் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு அரசு அறிவித்த 125 சதவீத கருணைத்தொகையில் 100 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 25 சதவீத தொகை எங்களுக்கு வழங்காமல் 3 ஆண்டுகளாக அலைக்கழித்து வருகிறார்கள். நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலக தாசில்தார் தொடர் விடுமுறையில் சென்றுள்ளார். கோப்புகளை கவனிக்கும் வெங்கடேசன் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். பொறுப்பு தாசில்தார் ராணியிடம் கேட்டபோது, அலட்சியமாக பதில் கூறுகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பாக அரசு அறிவித்துள்ள கூடுதல் 25 சதவீதம் இழப்பீட்டுத்தொகையை எங்களுக்கு கொடுத்த பிறகு சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும். 2018-ம் ஆண்டு கையகப்படுத்திய இடத்திற்கு வழங்கிய இழப்பீட்டுத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற ஆட்சேபனை மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத்தொகை வழங்காததால் கண்டமங்கலம் பகுதியில் நிலத்தை இழந்தோர் சுமார் 400 பேர் கடன் சுமையாலும், வீட்டை முழுமையாக கட்டி முடிக்காமலும் தனது எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினர்.