காவேரி கூக்குரல் சார்பில் தஞ்சையில் 4.75 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்.. எம்.எல்.ஏ. நீலமேகம் தொடங்கி வைத்தார்
|காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
தஞ்சாவூர்:
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் இந்தாண்டு (2024-2025 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தொடக்க விழா அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் விழாவிற்கு தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். விழாவில் மேயர் சன். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர். அமுத வடிவு ஆகியோர் பங்கேற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் இவ்விழாவில் பேசுகையில், "காவேரி கூக்குரல் சார்பாக 4,75,000 மரக்கன்றுகளை, சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு காவேரி படுகையில் நட வேண்டும் என்ற முனைப்போடு இவ்விழா தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வை சிறப்போடு செய்திருக்கிற ஈஷா மையத்திற்கு என் வாழ்த்துக்களையும் , பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்." என கூறினார்.
காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை ஈஷாவின் காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.