ஈஷா யோகா மைய வழக்கு: ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
|ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன ஆறு பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டார்கள் என்று சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை என்பவர், காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக்கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா? என்று கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மையத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் ஓராண்டு காலமாகியும் மந்தமான விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு, நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல், இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என்றும், ஈஷா யோகா மைய ஊழியர்கள், தன்னார்வலர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன ஆறு பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டார்கள் என்று கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.