புதுக்கோட்டை
வேங்கைவயலில் சாதிய பாகுபாடு உள்ளதா?-வக்கீல்கள் குழுவினர் ஆய்வு
|குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம் தொடர்பாக வக்கீல்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேங்கைவயலில் சாதிய பாகுபாடு உள்ளதா? என விசாரணை நடத்தினர். மேலும், ஆதிதிராவிட மக்களுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கியது.
நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்தனர். இதன் காரணமாக அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.
குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள அய்யனார் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், இரட்டை குவளை முறை வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு, ஆதிதிராவிட மக்களை அழைத்து கோவிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். அப்போது சாமியாடிய சிங்கம்மாள் என்பவர் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக, அவர் மீது வெள்ளனூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீக்கடைக்காரர் மூக்கையா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி கடந்த 3-ந்தேதி சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, ஜாமீன் வழங்க மறுத்ததுடன், கிராமத்தில் இப்போதைய உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய 2 வக்கீல்கள் கொண்ட குழுவை அமைத்து 6-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று (சனிக்கிழமை) ஒத்திவைத்தார்.
வக்கீல்கள் குழு ஆய்வு
இதனைதொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டு அரசு வக்கீல் குமார் தலைமையில் வக்கீல்கள் செந்தில்குமார், சங்கீதா ஆகியோர் கொண்ட குழுவினர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிராமத்தில் சாதிய பாகுபாடு உள்ளதா? என்று கேட்டறிந்தனர். பின்னர் பட்டியலின மக்கள் உள்பட அனைத்து சமுதாய மக்களையும் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு வரவழைத்து ஒரே நேரத்தில் வழிபாடு செய்ய வைத்தனர். பின்னர் வக்கீல்கள் குழுவினர் கிராமத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் அறிக்கையை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) சத்யாவிடம் சமர்ப்பிக்கவுள்ளனர். விசாரணையின்போது, அனைத்து சமூக மக்களும் தங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஒற்றுமையாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குடிநீர் வினியோகம்
இந்தநிலையில் வேங்கைவயல் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடாக அருகே உள்ள இறையூரில் இருந்து புதிய குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு சின்னதுரை எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைச்சாமி, குளத்தூர் தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.