< Back
மாநில செய்திகள்
அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?

தினத்தந்தி
|
21 April 2023 12:30 AM IST

அரசுப் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள்தான் படிப்பார்கள். போதுமான வசதிகள் இருக்காது. அங்கு முறையாக ஆங்கிலம் கற்க முடியாது. ஆசிரியர்கள் ஏனோ தானோ என்றுதான் பாடம் நடத்துவார்கள். இவை எல்லாம் அரசுப் பள்ளிகளை நினைக்கையில் பல பெற்றோர்களின் மனங்களில் நிழலாடும் அச்சங்கள்.

கல்வி நலத்திட்டம்

இந்த அச்சங்கள் மாறவேண்டும். பெற்றோர்கள் மட்டுமே நினைத்து மாற்றிவிட முடியாது. அரசு நினைக்க வேண்டும். அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். அர்ப்பணிப்பு மனதுடன் அறப்பணியாற்ற வேண்டும். அவ்வாறு நடக்கும் என்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே போகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கல்விக்காக தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும், காலை மதிய உணவுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் வருகிற 28-ந்தேதி வரை 'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசு பள்ளிகூடங்களில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதுபற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றைக் காண்போம்.

தனியார் பள்ளிக்கு நிகராக

பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி எஸ்கலின்:- கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி செயல்படுவதால் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்துவதால் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்று கொள்ளும் எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பாடங்களை கற்று வருகின்றனர். பள்ளி நேரம் முடிந்த பிறகு கற்க விரும்பும் மாணவர்களுக்கென்று இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு உள்ள வசதி, சலுகைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி தற்போது மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி முதல் பள்ளியில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் எதிர்காலத்தை வளப்படுத்துவோம் என்கிற தலைப்பில் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காலை உணவு

பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த ஜூலியட் ஜோசப்:- எனது மகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான் சேர்த்துள்ளேன். அவளுக்கு அங்கு தினமும் விதவிதமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு சென்ற அவள் தற்போது பள்ளிகளில் சக மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு தவறாமல் சாப்பிடுகிறார். மேலும் வித்தியாசமாக பாடங்கள் கற்று கொடுக்கப்படுகிறது. பள்ளியில் கற்று கொடுக்கும் பாடங்களை வீட்டில் வந்து ஆர்வத்துடன் படிக்கிறாள். அரசு பள்ளிகளில் படிப்பு மட்டுமின்றி மாணவ-மாணவிகளின் திறமைகளும் கண்டறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நல்ல அரசு திட்டங்கள் இருப்பதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு கட்டாயம் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா

பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்:- முன்பெல்லாம் அரசு பள்ளி என்றால் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடங்கள் கற்பிக்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவி வந்தது. தற்போது அரசின் பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிக்கு நிகராக உயர்ந்துள்ளது. அந்த அளவுக்கு மாணவ-மாணவிகளுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு தொடக்க பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவிகளின் உயர் கல்விக்கென புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்கப்படுகிறது.

வாசிப்பு திறனை வளர்க்க தேன்சிட் எனும் சிறார் இதழ், நூலகத்திற்கென்று தனி நேரம், இதழ்களின் படைப்புகளில் இருந்து வினாடி-வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. திரைப்பட ரசனையும், விமர்சன பார்வையையும் வளர்க்க பள்ளி தோறும் சிறார் திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகிறது. இலக்கிய ஆர்வத்தை வளர்க்க பேச்சு, கட்டுரை போட்டிகள் உள்பட இலக்கிய மன்ற செயல்பாடுகள், அரசியல் சாசனம் வளர்க்க அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம், கலைத்திருவிழா போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. கலைத்திருவிழா போட்டிகள் மூலம் மாணவ-மாணவிகளின் திறமைகள் வெளி கொண்டு வர முடிந்தது. மேற்கண்ட போட்டிகளில் வென்ற மாணவர்கள்வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். போட்டி தேர்வுகளுக்கான நுழைவு தேர்வுக்கு அரசு சார்பில் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள், சலுகைகளை சொல்லி கொண்டே போகலாம். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்

தமிழ்நாடு கல்வித்துறை அதிகாரிகள்:- தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியாகும். அது வரை அரசுப்பள்ளிகளில் 2023-2024- கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைககளைக் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்