< Back
மாநில செய்திகள்
சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதமா?
கரூர்
மாநில செய்திகள்

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதமா?

தினத்தந்தி
|
5 Jun 2023 12:37 AM IST

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதமா? என இல்லத்தரசிகள் தொவிக்கப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சமையல் கியாஸ் சிலிண்டர்

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகின்றன.கடந்த சில மாதங்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,068.50-க்கு வினியோகிக்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் ரூ.24 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதுவும் அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்து உள்ளது.

பொதுமக்கள் தவிப்பு

கரூர் மாவட்டத்தில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில இடங்களில் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தன. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து இல்லத்தரசிகள் சிலர் கூறியதாவது:-

அடுத்த நாளே வருகிறது

வெள்ளியணையை சேர்ந்த இல்லத்தரசி நந்தினி:-இன்று பெரு நகரங்கள் தொடங்கி சிறு குக்கிராமங்கள் வரை அனைத்து வீடுகளிலும் சமையல் செய்வதற்கு சிலிண்டர் அடுப்பை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு அனைத்து குடும்பத்தினரும் மாறி விட்டனர். இதனால் அனைத்து குடும்பத்தினருக்கும் தட்டுப்பாடு இன்றி சிலிண்டர் கிடைக்கும் வகையில் சிலிண்டர்களை வழங்க ஆங்காங்கே முகவர்கள் உள்ளனர்.இந்த முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்த அடுத்த நாளே தற்போது சிலிண்டர்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எங்கள் பகுதியிலும் சிலிண்டரை பதிவு செய்தால் அடுத்த நாளே கிடைத்து விடுகிறது. இதனால் ஒரு வாரம் முதல் 10 நாள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்பது இல்லாததால் நாங்கள் சிலிண்டரை பதிவு செய்வதற்கு அவசரப்படுவதில்லை.

அதிக பணம் கேட்கிறார்கள்

கரூர் அரசு காலனியை சேர்ந்த இல்லத்தரசி சுகன்யா:சமையல் கியாஸ் சிலிண்டரை பொருத்த வகையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குள் வந்்து விடுகிறது. கியாஸ் அடுப்பில் உணவு சமைப்பது மிகவும் எளிதாக உள்ளது. இருந்தாலும், கியாஸ் அடுப்பை பழுது நீக்கும்போது (சர்வீஸ்) அதிக பணம் கேட்கிறார்கள்.ஆனால் அதற்கு தகுந்தால்போல் பழுது நீக்குவது இல்லை. மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சற்று அதிகமாக உள்ளது. இதனால் அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலையை குறைக்க வேண்டும்

வடசேரியை சேர்ந்த இல்லத்தரசி சத்யா:-சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே போனால் மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்தும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்தால் உடனுக்குடன் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு என தனி தொகை ஒதுக்க வேண்டியிருக்கிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. அதுபோல சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்தால் நன்றாக இருக்கும். சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை குறைத்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

புகழூர் அருகே வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி தெய்வசிகாமணி:-என்னிடம் 2 கியாஸ் சிலிண்டர் உள்ளது. ஒரு சிலிண்டர் காலியாகி விட்டால் உடனடியாக புதிய சிலிண்டருக்கு புக் செய்து விடுவேன். 2, 3 நாட்களில் வீடு தேடி சிலிண்டர் கொண்டு வந்து விடுவார்கள். தட்டுப்பாடு எங்கள் பகுதியில் இல்லை. சிலிண்டரை கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு ரூ.50 அதிகம் தர வேண்டும். ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை அடிக்கடி கூடிக்கொண்டே போகிறது. இதனால் மத்திய அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாடி வீடுகளுக்கு செல்லும்போது சிரமம்

வெங்கமேடு பகுதியில் சமையல் கியாஸ் வினியோகம் செய்யும் தொழிலாளி சதீஷ்குமார்:-நான் 10 ஆண்டுகளாக வாங்கப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சமையல் கியாஸ் வினியோகம் செய்து வருகிறேன். பதிவு செய்த மறுநாளே அவர்கள் இல்லத்திற்கே சென்று வழங்குவேன். அடுக்குமாடி வீடுகளுக்கு சிலிண்டர்களை கொண்டும் செல்லும்போது சற்று சிரமம் ஏற்படும்.சில நேரங்களில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வரும் லாரிகள் பழுதாகி விட்டால் கூடுதலாக ஒரு நாளாகும். எப்போதும் அப்படி ஏற்படுவதில்லை, வேைலக்கு செல்பவர்கள் கியாஸ் சிலிண்டர் புக் செய்தால் காலை 7 மணிக்கே கொண்டு சென்று கொடுத்து விடுவேன். இந்த தொழிலில் எனக்கு குறைவான சம்பளம் என்றாளும், நிறைவாக உள்ளது.

தட்டுப்பாடு இல்லை

எண்ணெய் நிறுவன அதிகாரிகள்:- ஆயுட்காலம் நிறைவடைந்த பழைய சிலிண்டர்களை கண்டுப்பிடித்து அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி கடந்த 2 மாதங்களாக நடந்தது. கியாஸ் கசிவு இல்லாத சிலிண்டர்கள் மாற்றப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகள் பயன்படுத்த முடியும் என்று உறுதி செய்யப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் பயன்பாட்டிலேயே இருந்து வருகிறது. இந்தபணியால் ஒரு சில பகுதிகளில் சிலிண்டர்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் சிலிண்டர் தட்டுப்பாடு எங்கும் இல்லை. நிலைமை சரியாகி விட்டது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்