பெரம்பலூர்
சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் தாமதமா?
|சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
சமையல் கியாஸ் சிலிண்டர்
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,068.50-க்கு வினியோகிக்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் ரூ.24 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதுவும் அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்து உள்ளது.
பொதுமக்கள் தவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில இடங்களில் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய சிலிண்டர்கள் உடனே வராததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
பல வாடிக்கையாளர்கள் 2 சிலிண்டர் வைத்திருந்தாலும் கடைசி நேரத்திலேயே முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்காமல் திணறுகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கின்போது கூட சிலிண்டர் தாமதமின்றி கிடைத்தன. தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து இல்லத்தரசிகள் சிலர் கூறியதாவது:-
விறகு அடுப்பு
பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்த இல்லத்தரசி திராவிட மணி:- பெரம்பலூர் மாவட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்தால் உடனுக்குடன் வினியோகம் செய்யப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. ஆனால் சிலிண்டரின் விலை தான் அதிகமாக இருக்கிறது. சிலிண்டர் வாங்குவதற்கு தனி தொகை ஒதுக்க வேண்டியிருக்கிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. அதுபோல் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்தால் நன்றாக இருக்கும். சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே போனால் மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்தும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம். விறகு அடுப்பு பயன்படுத்த வேண்டும் என்றால் மண்எண்ணெய் தேவை. ஆனால் ஏற்கனவே ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் சரியாக கிடைப்பதில்லை. சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை குறைத்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். மத்திய-மாநில அரசுகள் அறிவித்தது போல் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் மானியம் வழங்க வேண்டும்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
வேப்பந்தட்டையை சேர்ந்த பிரியா:- சமையல் கியாஸ் சிலிண்டர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தால் நீண்ட நாட்கள் காத்திருக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் சமீப காலமாக பதிவு செய்து ஓரிரு நாட்களில் சிலிண்டர் வந்து விடுகிறது. அதே சமயத்தில் சிலிண்டர் வண்டி வரும் நேரம் நமக்கு தெரிவதில்லை. சிலிண்டர்களை ஏற்றி வரும் பணியாளர்கள் செல்போனில் சிலிண்டர் வருகிறது என்ற தகவலை தெரிவித்தால் நன்றாக இருக்கும். மற்றபடி தற்போது சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. சிலிண்டர்களில் விலை ஏற்றத்தை மத்திய- மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
தட்டுப்பாடு இல்லை
எண்ணெய் நிறுவன அதிகாரிகள்:- ஆயுட்காலம் நிறைவடைந்த பழைய சிலிண்டர்களை கண்டுப்பிடித்து அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி கடந்த 2 மாதங்களாக நடந்தது. கியாஸ் கசிவு இல்லாத சிலிண்டர்கள் மாற்றப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகள் பயன்படுத்த முடியும் என்று உறுதி செய்யப்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் பயன்பாட்டிலேயே இருந்து வருகிறது. இந்தபணியால் ஒரு சில பகுதிகளில் சிலிண்டர்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் சிலிண்டர் தட்டுப்பாடு எங்கும் இல்லை. நிலைமை சரியாகி விட்டது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.