< Back
மாநில செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?

தினத்தந்தி
|
18 Nov 2022 12:43 AM IST

நாட்டு மக்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில் தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17 ஆயிரத்து 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதுமையான திட்டங்கள்

தமிழகத்தில் ஏழை-எளிய, பாமர மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த ஆஸ்பத்திரிகள்-61, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி-1, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள்-18, வட்டம்/வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள்-272, ஆரம்ப சுகாதார நிலையங்கள்-1,804, துணை சுகாதார நிலையங்கள்-8 ஆயிரத்து 713, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்-463 ஆகிய எண்ணிக்கையில் ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன. 'நடமாடும் மருத்துவமனை திட்டம்', 'மக்களை தேடி மருத்துவ திட்டம்', 'இன்னுயிர் காப்போம் திட்டம்' போன்ற புதுமையான திட்டங்களும் மருத்துவத்துறையில் புகுத்தப்பட்டு வருகின்றன.

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

மருத்துவத்துறையின் வளர்ச்சி, மேம்பாட்டை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில அரசு டாக்டர்கள் பணியில் அலட்சிய போக்கை கடைபிடித்து அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சென்னை பெரியார்நகர் ஆஸ்பத்திரிக்கு கால்தசை பிடிப்புக்கு சிகிச்சை பெற சென்ற வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (வயது 17) டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தனது காலை இழந்து, பின்னர் உயிர் இழந்திருப்பது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரியாவின் மரணம் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தையும், அவப்பெயரையும் உண்டாக்கி உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக அரிய வகை அறுவை சிகிச்சைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறுவது சாதனையாக பார்க்கப்படும் வேளையில் தவறான சிகிச்சைக்கு பிரியா பலியாகி இருப்பது மிகுந்த வேதனையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது பற்றி நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

சிறந்த சிகிச்சை

புதுக்கோட்டை பூங்குடியை சேர்ந்த லெட்சுமணன்:- எனது சகோதரருக்கு விபத்தின் காரணமாக கால் முறிவு எற்பட்டதால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நான் தான் கவனித்துக்கொள்கிறேன். இங்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்களும் உரிய நேரத்தில் வந்து பார்வையிட்டு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் பார்வையாளர்கள் வரும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஒருவரை தவிர யாரையும் அனுமதிப்பதில்லை. இதனால் தேவையில்லாத கூட்டம் தவிர்க்கப்படுகிறது.

தடுப்பூசி

அறந்தாங்கியை சேர்ந்த ஜான்சன்:- அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு நான் கடந்த வாரம் எனது பேரனுக்கு தடுப்பூசி போட சென்றேன். அங்கு சிகிச்சை முறையாக தரமாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. சிகிச்சை வழங்கியதில் எந்த குறைபாடுகளும் இல்லை.

செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை

ஆதனக்கோட்டையை சேர்ந்த வனிதா:- எனது குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தேன். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. எனவே தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எனது குழந்தையை சேர்த்தேன்.

இங்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனது குழந்தைக்கும் தற்போது காய்ச்சல் குறைந்து நலமாக உள்ளது. மேலும் இந்த மருத்துவமனையின் சில பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் எனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிப்பது சிரமமாக உள்ளது.

நாய், பாம்பு கடி மருந்துகள்

அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தை சேர்ந்த வீரப்பன்:- அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், நாய், பாம்பு கடிகளுக்கும் மருந்து வைத்துள்ளனர். நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குரங்கு தொல்லை

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்:- எனக்கு வயிற்றுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக இங்கு வந்தேன். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குரங்கு தொல்லை அதிகம் உள்ளது. வார்டுகளில் உள்ள ஜன்னல்களில் குரங்குகள் வராமல் இருக்க இரும்பு வலை அடித்திருந்தாலும் வெளியில் சாப்பாடு வாங்கிவரும் போது கையில் உள்ள பையை பிடிங்கி சென்றுவிடுகிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பயந்து அலறியடித்து ஓடுகின்றனர். மேலும் பெரும்பாலான இடங்களில் செல்போன் டவர் கிடைப்பதில்லை. மருத்துவமனை காவலாளிகள் பார்வையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்