கரூர்
போக்குவரத்து சிக்னல் முறையாக பராமரிக்கப்படுமா?
|விபத்து, நெரிசலை குறைக்க கரூர் காந்தி கிராமத்தில் போக்கு வரத்து சிக்னல் முறையாக பராமரிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பரபரப்பாக காணப்படும் சாலை
கரூர் சுங்ககேட்டில் இருந்து கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் காந்தி கிராமம் அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வருகிறது. இதனால் எப்போதும் காலை முதல் இரவு வரை இச்சாலை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் காந்திகிராமத்தில் குமார் ஸ்டோர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் மற்றும் வலது புற சாலைகள் பிரிந்து செல்கிறது. இடதுபுறம் செல்லும் சாலை வடக்கு காந்திகிராமம் எனவும் வலது புறம் செல்லும் சாலை தெற்கு காந்திகிராமம் எனவும் அழைக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் தெற்கு காந்திகிராமத்தில் பல நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளதால்் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குமார் ஸ்டோர் மெயின் ரோட்டுக்கு வந்த பிறகே கரூர் அல்லது திருச்சி நோக்கி செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
விபத்தில் சிக்க வாய்ப்பு
இதனால் திருச்சியில் இருந்து கரூர் வழியாகவோ அல்லது கரூரில் இருந்து திருச்சி வழியாகவோ செல்லும் கனரக வாகனங்கள், லாரிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு அப்பகுதியில் சாலைகள் இருபுறமும் பிரிந்து செல்கிறது என்பதை அறிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. எனவே அந்த வாகன ஓட்டிகள் அதிவேகமாக வரும்பொழுது உள்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திடீரென விபத்தில் சிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க கரூர்-திருச்சி சாலையில் குமார் ஸ்டோர் அருகே ஏற்கனவே போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த போக்குவரத்து சிக்னல்கள் இயங்காமல் உள்ளது. எனவே அந்த சிக்னல்களை சரி செய்து காலை முதல் இரவு வரை அந்த சிக்னல்கள் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து அதனை முறையாக பாராமிக்க வேண்டும், அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒருவரை நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடவடிக்கை வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த பாலசந்தர்:- கரூர் காந்திகிராமம் ஒரு பரந்த பகுதியாகும். இதனால் வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் என 2-ஆக பிரிந்து அங்கு பல நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கரூர்-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள காந்திகிராமம் குமார் ஸ்டோர் பகுதிக்கு வந்த பிறகு கரூருக்கோ அல்லது பிற ஊருக்கு செல்ல முடியும். ஏற்கனவே கரூர்-திருச்சி சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். குமார் ஸ்டோர் அருகே உள்ள மெயின் ரோட்டில் ஏற்கனவே சிக்னல் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசார் கண்காணிப்பு
சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி:-
கரூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து காந்திகிராமம் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலை வழியாக தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. காந்திகிராமம் குமார்ஸ்டோர் அருகே தானியங்கி சிக்னல் பொருத்தி போலீசார் கண்காணிக்க வேண்டும்
புறக்காவல் நிலையம் வேண்டும்
கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த அசோக்:-
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருவதால் ஓரளவுக்கு போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் கரூர்-திருச்சி சாலையில் காந்திகிராமம் குமார் ஸ்டோர்ஸ் அருகே உள்ள சாலையில் ஏற்கனவே போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தாலும், அவை செயல்படாமல் உள்ளது. எனவே தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் காந்திகிராமம் சாலையிலும் போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து சிக்னலை இயக்க நடவடிக்கை எடுத்து, அந்த பகுதியில் புறக்காவல் நிலையம் ஒன்றையும் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.
24 மணி நேரமும் இயங்குமா?
காந்திகிராமத்தை சேர்ந்த கண்ணன்:-
கரூர்-திருச்சி சாலை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இதனால் சுங்ககேட் முதல் காந்திகிராமம் வரை உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே குமார்ஸ்டோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலை சீர்செய்து 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுத்து, போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.