ராமநாதபுரம்
ராமேசுவரம் கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா?
|ராமேசுவரம் கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா? என்று இந்திய கடலோர காவல் படை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா? என்று இந்திய கடலோர காவல் படை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வு
ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் வி.எஸ்.பதானியா நேற்று விமானம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிக்கு வந்தார். அவர் விமானம் மூலம் மண்டபம் முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா இந்திய கடல் எல்லை வரையிலும் விமானத்தில் இருந்தபடியே இந்திய கடல் பகுதியில் உள்ள பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்ததுடன் இந்திய கடல் எல்லையையும் பார்வையிட்டார்.
இந்திய கடல் எல்லை வரை ஆய்வு செய்துவிட்டு உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ்.பருந்து கடற்படை விமான தளத்தில் வந்து இறங்கினார்.பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். முகாம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கிய இந்திய கடலோர காவல் படையின் இயக்குனரை கடலோர காவல் படையின் ஐ.ஜி மற்றும் மண்டபம் காவல்படை நிலைய இயக்குனர் ஷாநவாஸ் ஆகியோர் வரவேற்றனர்.
அணிவகுப்பு மரியாதை
தொடர்ந்து கார் மூலம் இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையம் சென்றார். அங்கு கடலோர காவல் படை கமாண்டோ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் கப்பல் மற்றும் ரோந்து கப்பல்களையும் பார்வையிட்டார்.
இந்திய கடல் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறித்த விவரங்கள் முழுமையாக கேட்டறிந்தார். கடலோர காவல் படை நிலையத்திலேயே நேற்று இரவு தங்கினார்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் மீண்டும் கார் மூலமாக மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை விமான தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.