அரியலூர்
குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது பயன்பாடாக உள்ளதா?
|குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது பயன்பாடாக உள்ளதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குடிநீர் குழாய் இணைப்பு
குடிநீா் என்பது பொதுமக்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. இதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வீடுகளில் குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்புறங்களை பொறுத்தவரை அந்த ஊரில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் மூலம்தான் குடிநீர் வசதி உள்ளது. மேலும் சில கிராமங்களில் ஊரணி, கிணறுகள், குளங்கள் மூலம் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பல குக்கிராமங்களில் தண்ணீர் வசதி என்பது இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் என்று கூறப்படும் உயிர் நீர் இயக்கம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. 60 சதவீதத்திற்கு குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களில், இந்த திட்டம் மிகச்சிறப்பாக செயல்பட்டதில் தமிழகம் முதல் இடம் பிடித்து சமீபத்தில் விருது கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்குவதில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
அலைச்சல் குறைந்தது
இத்திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளை அந்தந்த ஊராட்சியே தேர்வு செய்கிறது. அவர்களது வீட்டின் முன்பு குடிநீர் குழாய் வைத்து, அதில் தண்ணீர் பிடிப்பதற்காக சிமெண்டு தளமும் அமைக்கப்படுகிறது. மேலும் குடிநீர் ஆதாரத்தை கணக்கிட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏற்கனவே உள்ளதா? அல்லது புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா? குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் உள்ளதா? ஆழ்துளை கிணறு புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா? என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப தேவை அறிந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க செல்லும் அலைச்சல் குறைந்துள்ளது.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் கூறுகையில், 'ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் கடையக்குறிச்சி, ஓலையூர், காட்டாத்தூர், நாகம்பந்தல், ராங்கியம், ஸ்ரீராமன், வல்லம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அய்யப்பநாயக்கன் பேட்டை, தேவமங்கலம், பிராஞ்சேரி, வானதிராயன்பட்டினம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் பாளையக்குடி, சன்னாச்சிநல்லூர், தளவாய், துளார், தா.பழூர் ஒன்றியத்தில் சிந்தாமணி, இடங்கண்ணி, காருகுடி, மணகெதி, நாயகனைபிரியாள், உதயநத்தம், திருமானூர் ஒன்றியத்தில் கண்டிராதீர்த்தம், குலமாணிக்கம், புதுக்கோட்டை உள்ளிட்ட 26 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிகள் நடைபெற்று வரும் 23 ஊராட்சிகளில் மொத்தம் 21 ஆயிரத்து 269 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்த நாயகனை பிரியாள் ஊராட்சியில் 1,123 வீடுகளுக்கும், பிராஞ்சேரி ஊராட்சியில் 235 வீடுகளுக்கும், வானதிராயன்பட்டினம் ஊராட்சியில் 601 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் ஒன்றியத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' என்றார்.
அனைவருக்கும் குடிநீர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் நாயகனைபிரியாள் மேலமைக்கேல்பட்டி பழங்குடியினர் தெருவை சேர்ந்த காணிக்கை மேரி கூறுகையில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் எங்கள் ஊரில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 3 தெருக்கள் தள்ளியிருந்த குடிநீர் இணைப்பில் தான் ஊரில் உள்ள அனைவரும் தண்ணீர் பிடிப்போம். கடுமையான கூட்டத்திற்கு இடையே தண்ணீர் பிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதும் கஷ்டமாகும். பலர் காலி குடங்களுடன் வீடு திரும்புவார்கள். ஆனால் இப்போது ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் எங்கள் வீட்டுக்கே தண்ணீர் வருவதால், நிம்மதியாக இருக்கிறோம், என்றார்.
செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணன் கூறுகையில், சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒருசில வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு இருந்தபோது, குழாயை கழற்றிவிட்டு தண்ணீர் பிடிப்பார்கள். இதனால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காது. ஆனால் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ள நிலையில், தண்ணீர் வினியோகம் செய்யும் முறை சிறப்பாக உள்ளது, என்றார்.
கீழப்பழுவூர் அருகே வெற்றியூரை சேர்ந்த ஐஸ்வர்யா அன்புதாசன் கூறுகையில், இந்த திட்டத்தில் வீட்டுக்கு வீடு இலவச இணைப்பு என்று கூறிவிட்டு, தற்போது பணம் கட்டச்சொல்வதை மக்கள் எதிர்க்கின்றனர். பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்தபோது, மக்கள் தண்ணீரை வீணாக்கியதில்லை. ஆனால் வீட்டுக்கு வீடு தண்ணீர் இணைப்பு கொடுத்தவுடன் பலரும் தண்ணீரை வீணாக்கும் சூழலே நிலவி வருகிறது. மேலும் இந்த திட்டத்தால் மக்கள் ஆறு, குளங்களில் குளிப்பதை நிறுத்தி விட்டனர், என்றார்.