< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்துவருகிறதா?

தினத்தந்தி
|
2 May 2023 7:52 PM GMT

கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்துவருகிறதா? என கருத்து தெரிவித்துள்ளனர்.

வேலை நிமித்தமாக வெளியூர்களில் வந்து தங்கி இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்வதை பெரிதும் விரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று உறவினர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.

கோடை விடுமுறை

தற்போதைய எந்திரமயமான உலகில் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிள்ளை. உறவுகள் குறைவு. நேரமும் குறைவு. பழக்க வழக்கங்கள் புதிது என்பதால் உறவைத் தேடுவதைவிட மகிழ்வைத் தேடுவதாக எங்கெங்கோ செல்கிறார்கள்.

இருக்கும் உறவை நினைக்கிறார்களா? கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி பெற்றோர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

இணையத்தில் முடக்கம்

கோடை விடுமுறையை கழிக்க தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைகளுடன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த கணஞ்சாம்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி முத்துச்செல்வி கூறியதாவது:-

அரசு பொது தேர்வு முடிவடைந்ததும் கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை சமயத்தில் பெரும்பாலும் பெற்றோர்கிராமத்தில் உள்ள தங்களது அம்மா, அப்பா, வீட்டிற்கு குழந்தைகளை அனுப்பி வைப்பார்கள். அந்த காலத்தில் கிராமத்தில் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பழகுதல், கபடி, கிரிக்கெட் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளை கோடைக்காலத்தில் கற்றுக்கொள்வர். ஆனால் தற்போது செல்போன் வந்த பிறகு இணையதளத்தில் முடங்கி கிடக்கின்றனர். ஆதலால் அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.

சொந்த ஊர்

ராஜபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்:-

இன்றைய காலகட்டத்தில் கோடை விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு செல்வது குறைந்துள்ளது. கோவில் திருவிழா மற்ற சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால் சொந்த ஊருக்கு சென்று நேரத்தை செலவிட முடியவில்லை.

ஊரில் குழந்தைகளை விட்டு வருவதற்கும் எங்களை போன்ற பெற்றோர்களுக்கும் மனமில்லை. கோடை விடுமுறை என்பது ஒரு சில பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கும், முக்கிய கோவில்களுக்கு செல்வதற்கும் நேரம் சரியாகி விடுகிறது. ஒரு சிலர் தங்களின் பெற்றோரை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து கவனித்து வருவதால் சொந்த கிராமத்திற்கு செல்வதில்லை.

உறவுகளை பலமாக்கும் விடுமுறை

விருதுநகரை சேர்ந்த குடும்பத்தலைவி காளீஸ்வரி:-

நாங்கள் பள்ளி குழந்தைகளாக இருந்த போது கோடை விடுமுறையில் உறவினர் வீடுகளுக்கு செல்வதில் ஆர்வம் காட்டினோம். உறவினர்களும் கோடை விடுமுறை விட்டவுடன் தங்கள் இல்லத்திற்கு வருமாறு அழைப்பது வழக்கம். அவர்கள் வீடுகளில் இருந்தும் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம்.

இதனால் உறவு பலப்பட்டது. ஆனால் தற்போது குழந்தைகள் கோடை விடுமுறையில் வீட்டை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. ஆனால் அவர்களுடன் படிப்பவர்கள் வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலத்துக்கோ அல்லது வெளியூருக்கோ செல்வதாக இருந்தால் நாங்களும் வெளியே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தும் நிலையில் ஏதாவது ஒரு நகர் பகுதிக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்தநிலைமாற வேண்டும். உறவினர்கள் வீட்டிற்கு குழந்தையை அழைத்து செல்ல அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போது தான் உறவுகள் பலப்படும்.

பொருளாதார வசதி

அருப்புக்கோட்டையை சேர்ந்த இல்லத்தரசி பிரிசில்லா ஜூலியட்:-

கொரோனா காலத்திற்கு பின் முறையாக பள்ளி நடந்து தற்போது தான் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகளை விடுமுறையில் எங்காவது அழைத்துச் செல்லலாம் என்றால் பொருளாதார வசதி அதிகம் வேண்டும். உறவினர்கள் வீட்டிற்கு இந்த கால குழந்தைகள் செல்வதை தற்போது விரும்பவில்லை. முன்பு இருந்ததை போல கூட்டுக்குடும்பத்தையும் தற்போது காண முடியவில்லை. மொத்தத்தில் ேகாடை விடுமுறையில் சொந்த ஊர், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறது.

கிராமத்து உணவு

ஆலங்குளம் ராசாப்பட்டியை சேர்ந்த ஆசிரியை பிரியதர்ஷினி:-

பெரும்பாலான குழந்தைகள் சொந்த ஊர்களுக்கு செல்வதை விட பூங்கா, சுற்றுலா தலம் ஆகியவற்றிற்கு செல்வதை தான் விரும்புகின்றனர். ஒரு சிலர் வெயிலின் கொடுமையில் இருந்து பாதுகாக்க வெளியூர் பயணத்தை மேற்கொள்கின்றனர். கிராமங்களுக்கு சென்று குளங்களில், கிணறுகளில் குளிப்பது, உறவினர் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது, கிராமத்து உணவுகளை உண்பது போன்றவற்றை எல்லாம் இந்த கால மாணவர்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. உறவுகள் மேலும் மேம்பட குழந்தைகளை கோடை விடுமுறையில் உறவினர்கள் வீட்டிற்கு கண்டிப்பாக அனைத்து பெற்றோரும் அழைத்து செல்ல வேண்டும்.

கோடை கால பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாண்டியராஜ் கூறியதாவது:- நாங்கள் சிறுவயதில் கோடை விடுமுறை விட்டவுடன் மறுநாள் தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்போம். தற்போது எனது மகன் அவனது பாட்டி வீடான விருதுநகருக்கு சென்றால் 2 நாட்களில் மீ்ண்டும் எங்களது வீட்டிற்கு திரும்ப வந்துவிடுவான். இந்த காலத்து குழந்தைகள் வேறு இடத்தில் தங்க மறுக்கின்றனர். பாட்டி, தாத்தாவுடன் இருந்து உறவுகளை மேம்படுத்துவது தற்போது உள்ள குழந்தைகளுக்கு கஷ்டமாக உள்ளது. எனவே ஓரிரு நாட்கள் மட்டும் விட்டு விட்டு பின்பு கோடைகால பயிற்சிக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்