கள்ளக்குறிச்சி
மாயமான சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்றனரா
|கச்சிராயப்பாளையம் அருகே மாயமான சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்றனரா? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
கச்சிராயப்பாளையம்
என்ஜினீயர்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் பொட்டியம் சாலையில் வசித்து வருபவர் லோகநாதன். இவர் சீனாவில் உள்ள தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவியும் பர்வேஷ்(வயது 8), தரூண் ஆதித்யா(4) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பர்வேஷ் அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பும், தருண் ஆதித்யா யு.கே.ஜி. வகுப்பும் படித்து வருகின்றனர்.
லோகநாதன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 6-ந் தேதி இரவு லோகநாதன், மனைவி, மகன்களுடன் தூங்கி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் கவுரி படுக்கையில் இருந்து எழுந்து பார்த்தபோது தருண்ஆதித்யாவை காணவில்லை.
பெற்றோர் மீது சந்தேகம்
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் அக்கம்பக்கத்து இடங்களில் தேடியும் மகனை காணாததால் இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சிறுவனை கண்டுபிடிக்க விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது லோகநாதனின் வீட்டை சுற்றி சுற்றி வந்ததால் கணவன், மனைவி மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து லோகநாதன், கவுரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தீவிர தேடுதல் வேட்டை
அப்போது அவர்கள் சம்பவத்தன்று அதிகாலை 1 மணி அளவில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது தான் தருண் ஆதித்யாவை காணவில்லை. உடனடியாக அருகில் உள்ள பெரிய குன்று பகுதிக்கு சென்று தேடிப் பார்த்தோம். அங்கு அவனை காணவில்லை. அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். இதனால் எங்கள் மகனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அக்கராயப்பாளையம் பெரிய குன்று பகுதியில் உள்ள கல்குவாரி, குப்பை மேடு ஆகிய பகுதிகளில் தேடினர்.
3 தனிப்படைகள்
இந்த நிலையில் சிறுவன் காணாமல் போய் 2 நாட்கள் ஆகிவிட்டதால் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மேற்பார்வையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னசேலம் மாணிக்கம், கள்ளக்குறிச்சி சத்தியசீலன், கச்சிராயப்பாளையம் ஏழுமலை, மியாட் மனோ ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து காணாமல் போன சிறுவனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.