விருதுநகர்
தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?
|தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.
கண்கள் பூக்க காத்திருப்பு
மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.
சுகமான நினைவுகள்
அம்மா, அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.
காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.
100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.
இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.
விரல் நுனியில் தொழில்நுட்பம்
சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.
தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.
விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அதன் விவரம் வருமாறு:-
சினிமா வினியோகஸ்தர்
வினியோகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி:- நான் சினிமா அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக இருந்து படிப்படியாக உயர்ந்து மேலாளராக வினியோகஸ்தராக உயர்ந்துள்ளேன். தொழில்நுட்பம் வளர வளர சினிமாத்துறையும் அதற்கு தகுந்தாற்போல் மாறி வருகிறது. இதுவே, தியேட்டர் இன்னும் உயிர்ப்போடு இருக்க முக்கிய காரணம். எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் தியேட்டரில் மிகப்பெரிய திரையில் காட்சிகளை பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எதிலும் கிடைப்பதில்லை.
மகிழ்வான, துயரமான, சண்டை காட்சிகளின்போது இசைக்கப்படும் இசையுடன் கூடிய அந்த உணர்வை தியேட்டரில் படம் பார்க்கும்போது மட்டுமே பெற முடியும். இதையெல்லாம் மக்கள் நன்கு உணர்ந்ததன் காரணமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்த போதிலும் மக்கள் தியேட்டரை நோக்கி வருகின்றனர்.
ஆர்வம் இல்லை
ராஜபாளையம் கல்லூரி மாணவி சுபிக்சா கூறியதாவது:- தியேட்டர் சென்று புதிய படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை போன்ற கல்லூரி மாணவிகளுக்கு தற்போது இல்லை. புதிய படம் பார்க்க வேண்டும் என்றால் செல்போனில் டவுன்லோடு செய்து பார்த்து விடுகிறோம்.
டி.வி.யில் போடும் படங்களை பார்ப்பதற்கே நேரமில்லை. சமூக வலைதளங்கள் அதிகரித்துள்ளதால் பலர் தங்கள் நேரங்களை அதில் செலவிடுகின்றனர். திரையரங்கில் ஒரு படம் பார்ப்பதற்கு ஒருவருக்கு ரூ.200 செலவிட வேண்டிய சூழ்நிலை இருப்பதால் படம் பார்க்க செலவு செய்ய மனமில்லை. தியேட்டரில் உள்ள கடைகளில் உணவுப்பண்டங்கள் 3 மடங்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதுவும் ஒரு காரணம். வெளி யில் இருந்து உணவு பண்டங்களை வாங்கிச் செல்லவும் ஒரு சில தியேட்டர்களில் அனுமதிப்பதில்லை. இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆர்வம் இன்று குறைந்து விட்டது.
கட்டணம்
விருதுநகரை சேர்ந்த இல்லத்தரசி அனுஷா:-
படிக்கிற காலத்தில் சிநேகதிகளுடன் சினிமாவுக்கு செல்வதில் ஆர்வம் இருந்தது. அதன் பின்னர் இல்லற வாழ்க்கையை ஏற்ற பின்னர் கணவரின் விருப்பத்திற்கு ஏற்ற திரைப்படங்களுக்கு செல்லும் நிலை இருந்தது. குழந்தைகள் வந்த பின்னர் அவர்களை கவனிப்பதற்கு நேரம் போதாத நிலையில் திரைப்படங்களுக்கு செல்லும் ஆர்வம் குறைந்தது.
குழந்தைகள் வளர்ந்த பின்னர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற எப்போதாவது அவர்களுடன் திரைப்படங்களுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் தற்போது வீட்டில் இருந்தபடியே டி.வி.யில் படம் பார்க்கும் வாய்ப்பு வந்த பின்னர் தியேட்டர்களே மறந்து விட்டது. அதிலும் தற்போது தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதற்கான கட்டணத்தை நினைத்தால் அந்த ஆசையே இல்லாமல் போய்விடும். மொத்தத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் வழக்கம் மாறிவிட்டது. இதற்கு கொரோனா கால நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.
ரூ.10-க்கு சினிமா
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த என்ஜினீயர் ராம்ஜி:- தற்போது தியேட்டர்களில் சினிமா பார்க்கும் ஆர்வம் பொதுமக்களிடம் குறைந்து வருகிறது. முன்பு காலங்களில் ரூ.10 இருந்தால் படம் பார்த்து விடலாம்.
ஆனால் தற்போது ஒரு படம் பார்க்க ஒருவருக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவும் ஒரு காரணம் ஆகும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது செல்போன் மூலமாக படங்களை பார்த்து விடுவதால் ஒரு சிலர் தான் தியேட்டரை தேடி செல்கின்றனர்.
நாளுக்கு நாள் தியேட்டருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
நாடகங்கள்
அருப்புக்கோட்டையை சேர்ந்த தனலட்சுமி:-
முந்தைய காலகட்டங்களில் பொழுதுபோக்கிற்கு என தியேட்டர் மட்டுமே இருக்கும். டூரிங் டாக்கீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திரைப்படங்களை பார்த்து பொழுதை கழித்து வந்தோம். தோழிகளுடனும், குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக சென்று திரைப்படங்களை பார்த்தோம்.
ஆனால் தற்போது நாடகங்கள், அலைபேசிகள் என பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது. மேலும் அனைத்து திரைப்படங்களுமே திரைக்கு வந்து சில நாட்களிலேயே டி.வி.யில் வந்து விடுகிறது. தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளது. ஆதலால் திரையரங்கிற்கு செல்வது என்பது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.