< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?

தினத்தந்தி
|
5 April 2023 2:35 AM IST

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப்பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப்போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப்போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.

தனியாருக்கு குத்தகை

மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச்சாலைகளை அமைத்து அவற்றை பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.

சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.

எண்ணிக்கையை குறைக்கலாம்

தாயில்பட்டி உஷா:-

சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனையாக உள்ளது. வீட்டு பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகை சுங்க கட்டணத்திற்கு ஒதுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதுவே தற்போது பெரும் செலவாக இருக்கிறது. ஆகையால் சுங்க கட்டணத்தை குறைக்க மத்திய, மாநில, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் சாலை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலாக வசூலிக்கப்பட்டுள்ளதால் சுங்கச்சாவடிகளை முழுமையாக அப்புறப்படுத்தலாம் அல்லது சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சிவகாசியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம்:- தொழில்நகரமான சிவகாசியில் இருந்து பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இதற்காக தினமும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் வடமாநிலங்களில் இருந்து 15 முதல் 20 சுங்கச்சாவடிகளை கடந்து சிவகாசிக்கு வந்து செல்கிறது.

அதேபோல் இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், தீப்பெட்டிகள், அட்டை பெட்டிகள், பாலிபேக் பொருட்கள், நோட்டுபுத்தகங்கள் என பல்வேறு பொருட்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று வரும் போது ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரியின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சுங்கச்சாவடி கட்டணமும் உயாத்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, முப்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இருந்த தமிழகத்தில் சிவகாசி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கனரக வாகங்கள் வந்து செல்லும் போது கூடுதலாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவு ஆகிறது. இந்த கட்டண உயர்வு அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இதனை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்கச்சாவடிகள் தேவையற்றது

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க செயலர் இதயம் முத்து:-

மத்திய அரசுக்கு சாலை மேம்பாட்டு நிதியாக பெட்ரோல் டீசலுக்கு வரி வசூலிக்கப்படுவதால் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ரூ.20 லட்சத்து 70 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எந்த வணிகரும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தப்ப முடியாத வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டிய மத்திய அரசு அதற்கு வரி விதிப்பது என்பது ஏற்புடையது அல்ல.

அதிலும் சென்னைக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது சுங்க சாவடிகள் 0 கிலோமீட்டர் வேகத்திற்கு கொண்டு வந்து விடுகிறது. அதாவது எங்கள் வேகத்தை தடை செய்கிறது எனவே மொத்தத்தில் நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடிகள் தேவையற்றது. சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை தான் உயரும். இதன் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஒரு நடைமுறையை மக்களுக்கான அரசு கைவிடுவதில் தவறில்லை.

காலதாமதம்

தொழிலதிபர் காளீஸ்வரி:-

விருதுநகரில் இருந்து சென்னைக்கு காரில் சென்றால் சென்னைக்கான பஸ் கட்டணத்தை விட சுங்கச்சாவடி கட்டணம் அதிகமாகி விடுகிறது. அதுவும், பாஸ்ட் ட்ராக், முறைக்கு ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சுங்கச்சாவடியில் வரிசையில் நின்றால் அடுத்த நுழைவுவாயிலுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படும் நிலையில் அதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

நெடுந்தூரப் பயணத்தில் இம்மாதிரியான இடையூறுகளால் பயணத்தில் காலதாமதம் உட்பட மன உளைச்சலும் ஏற்படுகிறது. மக்களுக்கான வசதியை செய்து கொடுக்க வேண்டிய அரசு அதற்கு கட்டணம் வசூலிப்பது என்பது ஏற்புடையதல்ல. எனவே சுங்கச்சாவடிகள் அகற்றப்படுவதோடு வருங்காலங்களில் ஜி.பி.எஸ். முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

காலாவதியான சுங்கச்சாவடி

ராஜபாளையம் லாரி உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் மாடசாமி:- சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திக்கொண்டே வருகிறது. இதனால் ராஜபாளையம், சத்திரப்பட்டி, தளவாய்புரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரை, கப்பலூர், சுங்கச்சாவடி வழியாக பல்வேறு ஊர்களுக்கு லாரிகள் செல்லும் பகுதியில் சுங்கச்சாவடி வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் வரி உயர்வால் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அதேபோல காலாவதியான சுங்கச்சாவடிகளை திரும்ப பெற வேண்டும்.

எரியாத மின்விளக்குகள்

முடுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் தர்மசாஸ்தா:-

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடி கட்டணம் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி, கார் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். டீசல், பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேபோல சுங்கசாவடி கட்டணமும் அடிக்கடி உயருகிறது. ஆனால் வாடிக்கையாளர்களிடம் வாடகை கூடுதலாக வாங்க முடியவில்லை.

எத்தனை முறை சுங்கச்சாவடி கட்டணம் கூடினாலும் சிரமப்படுவது லாரி, கார் டிரைவர், உரிமையார்கள் தான். நான்கு வழிச்சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாகியும் சாலையில் இரு ஓரங்களிலும் மரங்கள் வளர்க்கப்படவில்லை. சாலைகளில் உள்ள விளக்குகள் சரியாக எரிவதில்லை, சாலைகளின் பிரிவுகளில் சிக்னல் விளக்குகள் எங்கும் எரியவில்லை, சாலைகளின் ஓரங்களில் உள்ள மழைதண்ணீர் செல்ல வாருகால் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாருகால் முழுவதும் மண் நிரம்பி உள்ளது. நெடுஞ்சாலைகளில் உரிய வசதி எதுவும் செய்து கொடுக்காமல் அடிக்கடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்துவதால் நாங்களும், பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.

கூடுதல் சுமை

அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி:-

தற்ேபாது சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. இதனால் வியாபாரிகள் பலத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு எங்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கிறது.

அனைத்து சுமைகளும் கடைசியாக மக்கள் மீது சுமத்தப்படும். எனவே மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மத்திய அரசை வலியுறுத்தி சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது குத்தகை காலம் முடிந்தவுடன் அந்தந்த மாநில அரசே சுங்கச்சாவடிகளை நிர்வாகம் செய்ய வேண்டும்.

தொழில் செய்ய முடியாத நிலை

அருப்புக்கோட்டையை சேர்ந்த டிரைவர் மகாதேவன்:- சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது டிரைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமத்திற்கு ஆளாகி வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் உயர்வால் கவலை அடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியும், மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடியும் அருகருகே உள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டணம் உயர்வால் வாடகை வாகன தொழிலே செய்ய முடியாத சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்