கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? - டிடிவி தினகரன் கேள்வி
|எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா?
டெல்லி சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என டெல்லி முதலமைச்சர் சொந்த மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுத்ததைப் போல திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்?
எப்போதுமே தமிழ்நாட்டின் மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு சொந்த நலனுக்காகவே சிந்திக்கும் திமுக தலைவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவாரா?
பெங்களூரு விமானநிலையத்துக்கே வந்து தன்னை வரவேற்ற துணைமுதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கோரிக்கைவைக்கத் தவறியது ஏன் ?
குறுவை சாகுபடிப் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.