< Back
மாநில செய்திகள்
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி
மாநில செய்திகள்

மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி

தினத்தந்தி
|
30 Aug 2023 5:00 AM IST

மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை காவடி ஆட்டம்

கோவை நொய்யல் திருவிழாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அங்கு அவருக்கு காவடி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை காவடியை வாங்கி சிறிது நேரம் ஆடினார். தொடர்ந்து பேரூர் படித்துறையில் நடந்த நிகழ்ச்சியில் மகா ஆரத்தி எடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை விமான நிலைய விரிவாக்கத்தில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 100 சதவீதம் முடிக்கப்பட்டு விட்டது. அதற்கான தொகையை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கியது.

கண்டிக்கத்தக்கது

வருகிற 31-ந் தேதி மத்திய மந்திரி பியூஷ்கோயல் கோவை வருகிறார். அவா் தொழில்துறையினருடன் சந்தித்து பேசுகிறாா். 2-ம் கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தென்காசியில் தொடங்கி 19-ந்தேதி கோவைக்கு வருகிறேன். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையில் அம்மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அரசியல் அமைப்பின் சட்டத்தை கேலிக்குள்ளாக்குகிறது.

தமிழகத்தில் எந்த துறைக்கு எவ்வளவு தொகையை மத்திய அரசு கொடுத்து உள்ளது என்று ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கான 10 பக்கங்கள் கொண்ட புள்ளிவிவரத்துடன் கூடிய வெள்ளை அறிக்கையை 24 மணி நேரத்தில் வெளியிடுகிறோம்.

வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?

இந்த குற்றச்சாட்டை வைத்து உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? ஆதாரமின்றி அவதூறாக பேசுவது முதல்-அமைச்சருக்கு அழகல்ல.

கோவை-கரூர் இடையே பசுமை வழிச்சாலை கொண்டு வரவேண்டும். ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அந்த பகுதி வளர்ச்சியடையும். மோடி போட்டியிட்டால் அங்கு சீமான் போட்டியிடுவதாக கூறுவது சீமான் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்று வழிதெரியாமல் செல்கின்றார் என்பது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்