< Back
மாநில செய்திகள்
நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா?

தினத்தந்தி
|
20 March 2023 12:15 AM IST

ஒருவருடைய உடல் ‘இன்சுலினை' பலன் அளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.

அறிகுறிகள்

உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கு அதிகமான மக்களை கொல்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது, அதிக பசி ஏற்படுவது, மிக வேகமாக எடை குறைவது, அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிகக்காலம் பிடித்தல், திரும்பத்திரும்ப தோல், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்படுவது, பாதங்களில் உணர்ச்சி குறைவது அல்லது எரிச்சல் ஏற்படுவது தான் நீரழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமலும் வருகிறது.

வாழ்க்கை முறை மாற்றம்

நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் ஆகியவை நடுத்தர வயது கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாகும். இதுதவிர அதிகமாக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு நம்மை அழைத்து செல்கிறது.

தற்போது இது ஒரு வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினையாகி வருகிறது. உலக அளவில் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் தரவின்படி, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது 4 மடங்கு அதிகமாகி உள்ளது என்கிறது.

அதிகரிக்கும்

உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019-ம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவிகிதம் அதிகமாகும்.

சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும். இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட 4 பேரில் ஒருவர் 'டைப்-2' நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

உலக நீரிழிவு தினம்

இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்த அக்கறையோடு உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு இந்நாளை உருவாக்கின.

160 நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரசார இயக்கமான இது, 2006-ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாளாக இருந்து வருகிறது.

நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

தலைநகராக மாறுகிறதா?

புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் கார்த்திக்:- நீரிழிவு நோய் டைப்- 1, டைப்-2 என உள்ளது. இன்சூலின் சுரக்காமல் இருப்பது டைப்-1 வகை நோயாகும். இது சிறு குழந்தைகளுக்கு கூட வந்துவிடுகிறது. டைப்-2 வகை என்பது இன்சூலின் சுரக்கும், ஆனால் பெரிய அளவில் வேலை செய்யாது. அதிகமாக இனிப்பு வகை சாப்பிடுபவர்கள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு உடலில் இன்சூலின் வேலை செய்யாது. அதனால் நீரிழிவு நோய் வரும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு டைப்-2 வகை நீரிழிவு நோய் அதிகமாக உள்ளது. டைப்-2 வகையானது நமது உணவு பழக்கவழக்கத்தினால் வருகிறது. உடற்பயிற்சி செய்தல், உணவு கட்டுப்பாடுகள் இவற்றை கடைப்பிடித்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தால் உடனடியாக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தல் போன்றவை கடைப்பிடித்தால் மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பலர் அவ்வாறு செய்யாமல் விட்டுவிடுவது தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் நீண்ட நாளாக எடுத்து கொள்ள வேண்டும் என எண்ணுவது தவறானது. மாத்திரைகள் எடுத்து கொள்வதின் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கு 25 வயதிற்கு மேல் உள்ளவர்கள் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் உணவு கட்டுப்பாடுகள் மேற்கொண்டால் கட்டுப்படுத்த முடியும். தற்போதைய நிலையில் நீரிழிவு நோயின் தலைநகராக தமிழ்நாடு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. எனவே ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகள் போன்றவை கடைப்பிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி, நடைபயிற்சி

சித்த மருத்துவர் சரவணன்:- நீரிழிவு நோய் என்பது உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும் போது உருவாக கூடிய தொற்றா நோய். இந்த நோய் வராமல் தடுக்க காலை, மாலை உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் கடைப்பிடிக்க வேண்டும். உணவு வகைகளில் அதிகப்படியான நார்சத்து, புரதசத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு சாப்பிடும் போது நன்றாக உணவுகளை மென்று சாப்பிட வேண்டும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடித்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். நீரிழிவு நோய் வந்தால் கண், சிறுநீரகம், நரம்புகள் பாதிக்கும். இதய நோய் வரவும் வாய்ப்பு உள்ளது.

கிராமப்புறங்களில் அதிகரிப்பு

வடகாடு பகுதியை சேர்ந்த மாரியம்மா:- நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய்க்கு ஆளாகாதவர்களே இல்லை எனக்கூறும் அளவுக்கு தற்போது, ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப நோயாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளன. முன்பெல்லாம் நகர்ப்புற பகுதிகளில் தான் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகளவில் இருந்தன. தற்போது கிராமப்புற பகுதிகளில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதின் விளைவாக ஏழை, எளிய மக்கள் சம்பாதிக்கும் பணம் பாதியளவு மருத்துவமனைக்கே சென்று வருகிறது. எனவே இதற்கான காரணத்தை கண்டறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணையம் பாதிப்பு

முக்கண்ணாமலைப்பட்டி ஜமால்முகமது:- உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சர்க்கரை அதிகரிக்கும்போது அது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பதுடன், கணையமும் பாதிப்படைந்து நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடுகிறது. இதனால் நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உடற்பயிற்சி செய்வதின் மூலம் சக்கரையை கட்டுப்படுத்தலாம்.

காலை உணவு

விராலிமலை வேலூரை சேர்ந்த பாண்டி:- தற்போது உள்ள காலகட்டத்தில் நீரிழிவு நோயால் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அதற்கு மிக முக்கிய காரணம் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதால் உடல்பருமன் அதிகமாகிறது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்ப கணையம் அதிகமாக இன்சுலினை சுரந்து சுரந்து விரைவில் செயல் இழக்கிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. மேலும் முறையான உடற்பயிற்சி, கடின உழைப்பு இல்லாமையும் ஒரு காரணமாக அமைகிறது. நவநாகரீக காலத்தில் அனைவரும் பணத்தை சேர்ப்பதில் காட்டும் அக்கறையை அவர்களது உடல் ஆரோக்கியத்தில் காட்ட தவறி விடுகின்றனர். அதேபோல் இன்றைய இளைஞர்கள் போலியான விளம்பரங்களை பார்த்து காலை நேர உணவுகளை உண்பது அநாகரீகம் என நினைத்து நஞ்சை உட்கொண்டு வருகின்றனர். பரம்பரை நோயாக இந்த நோய் கருதப்பட்டாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தங்களது பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் முறையான உடற்பயிற்சி உள்ளிட்டவர்களை சிறு வயது முதலே கற்றுக் கொடுத்து வளர்த்து வந்தால் எதிர்காலத்தில் இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சிறுதானிய உணவுகள்

அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி கோபாலகிருஷ்ணன்:- ரசாயனம் கலந்த உரங்களை பயன்படுத்தி உணவுகளை விளைவிக்கிறோம். அந்த உணவுப் பொருட்கள் விஷம் கலந்த உணவு பொருட்களாக மாறிவிட்டன. அரிசி சிறியதாக இருக்க வேண்டும். பள பளவென இருக்க வேண்டும் என நினைத்து அரிசியை ஆலைகளில் சென்று சன்னரக அரிசிகளை வாங்கி உட்கொள்கின்றனர். அந்த அரிசிகளை பாலீஸ் செய்வதற்கே பல்வேறு விதமான வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றது. அதுவே நமக்கு எளிதில் சர்க்கரை நோய் வருவதற்கு வழிவகுக்கும். கேப்பையை ரொட்டியாக சுட்டு சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். அதே கேப்பையை கூழாக செய்து சாப்பிட்டால் சர்க்கரையை அதிகப்படுத்தும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர் மதிய உணவுக்கு பதிலாக 200 கிராம் காய்கறிகளை உட்கொள்ளலாம். கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு தானிய உணவுகளான சாமை, குதிரைவாலி, பொங்கல், இட்லி போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மாப்பிள்ளை சம்பா, சம்பா அரிசி, கருங்குருவை அரிசி ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். குடல்வாழை அரிசியை தினமும் உட்கொண்டால் நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தும். இது செரிமானமாக அதிக நேரம் ஆகும். அப்போது உடம்புக்கு தேவையான இன்சுலின் அதிகளவு சுரக்கும். திடமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் மகராசனம் பயிற்சி, எட்டு நடை பயிற்சி செய்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்த முடியும். ஆவாரம் பூ, இலை, வேர், பட்டை ஆகியவற்றை கொண்டு ஆவார பஞ்சாங்க சூரணம் செய்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு மிகவும் குறையும். அதுமட்டுமின்றி மருதம் பட்டை, கீழாநெல்லி ஆகியவற்றில் பொடி செய்து தினமும் சுடு தண்ணீர் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். பொதுவாக நாட்டு செக்கில் ஆட்டிய கருப்பட்டி கலந்த நல்லெண்ணையை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்