சென்னை
நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து
|நாட்டிலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் நீாிழிவு நோயின் பரவல் தற்போது கிராமப்புறங்களில் 8 சதவீதமும், நகர்புறங்களில் 14 சதவீதமும் அதிகமாகி விட்டது.
ஒருவருடைய உடல் 'இன்சுலினை' பலன் அளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.
மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கு அதிகமான மக்களை கொல்கிறது.
அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது, அதிக பசி ஏற்படுவது, மிக வேகமாக எடை குறைவது, அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிகக்காலம் பிடித்தல், திரும்பத் திரும்ப தோல், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்படுவது, பாதங்களில் உணர்ச்சி குறைவது அல்லது எரிச்சல் ஏற்படுவது தான் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமலும் வருகிறது.
நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் ஆகியவை நடுத்தர வயது கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாகும்.
இதுதவிர அதிகமாக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு நம்மை அழைத்து செல்கிறது.
தற்போது இது ஒரு வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினையாகி வருகிறது. உலக அளவில் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் தரவின்படி, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது 4 மடங்கு அதிகமாகி உள்ளது என்கிறது.
அதிகரிக்கும்
உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019-ம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவிகிதம் அதிகமாகும்.
சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும். இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட 4 பேரில் ஒருவர் 'டைப்-2' நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
உலக நீரிழிவு தினம்
இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்த அக்கறையோடு உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு இந்நாளை உருவாக்கின.
160 நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரசார இயக்கமான இது, 2006-ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாளாக இருந்து வருகிறது.
தலைநகராக மாறுகிறதா?
இதுகுறித்து பொது மற்றும் குடும்ப நல மருத்துவர் டாக்டர் எஸ்.அமுதகுமார் கூறும் போது, 'நாட்டிலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 'பணக்காரர்களின் நோய்' என்று கூறிவந்த நிலை மாறி 'வெகுஜன நோய்' என்று சொல்லும் நிலைக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு கூறும் கணக்கெடுப்பின்படி 20 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நீாிழிவு நோயின் பரவல், கிராமப்புறங்களில் சுமார் 3 சதவீதமும், நகர்புறங்களில் 6 சதவீதமும் இருந்தது. தற்போது கிராமப்புறங்களில் 8 சதவீதமும், நகர்புறங்களில் 14 சதவீதமும் அதிகமாகி விட்டது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் வேலைகளுக்கு செல்லாமல் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இளம் வயதினருக்கும் அதிகம் பரவ ஆரம்பித்துவிட்டது. கலோரி, சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ரசாயன பொடிகள் அதிகம் உள்ள உணவுகள், சுத்தமில்லாத உணவுகளை எந்த கவலையும் படாமல் அதிகமாக உண்பதே தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் பரவ காரணமாகி விடுகிறது. உணவு கட்டுப்பாடு மிக அவசியம் தேவை. தற்போதைய நிலையில் நீரிழிவு நோயின் தலைநகராக தமிழ்நாடு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது' என்றார்.
உடல் உழைப்பு இல்லை
அமைந்தகரை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை (இந்திய மருத்துவம்) உதவி மருத்துவ அலுவர் டாக்டர் ஜெ.பி.வெண்தாமரை செல்வி கூறும் போது, 'நீரிழிவை நோயை ஒழுங்குப்படுத்த உணவு முறைகளை முதலில் ஒழுங்குப்படுத்த வேண்டும். டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள், 'ஜங் புட், பாஸ்ட் புட்' போன்றவற்றை இளைய சமுதாயத்தினர் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அதிகம் சாப்பிட்டுவிட்டு உடல் உழைப்பு இல்லாமல் செல்போனில் முடங்கி கிடப்பதால் அவர்களுக்கு எளிதாக நீரிழிவு நோய் வருகிறது. இதனை முதலில் தடுக்க வேண்டும். வல்லாரை கீரை நினைவாற்றலை மட்டும் அதிகரிப்பதில்லை, மாறாக நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தியரால் சொல்லப்பட்ட வல்லாரை சூரணம் நீரிழிவுக்கு நல்ல பயனை அளித்து வருகிறது. அதேபோல் அகத்தி கீரை 15 நாட்களுக்கு ஒரு முறை உட்கொள்ளும் போது அவை பித்த தமனியாக செயல்பட்டு நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. வெந்தயத்தை பொடி செய்து இரவில் சுடுதண்ணீரில் ஒரு கரண்டி கலந்து குடிப்பதாலும் நீரிழிவு கட்டுக்குள் இருக்கிறது.
அதேபோல் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலை' மருந்து சாப்பிடுவதால் நீரிழிவு வராமலும் தடுக்க முடியும். நீரிழிவை கட்டுப்படுத்த முருங்கை கீரையும் நல்ல பலனை தரும்' என்றார்.
உணவுக்கட்டுப்பாடு
தாம்பரத்தைச் சேர்ந்த எம்.சுப்பையா கூறும் போது, 'உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடை பயிற்சி உள்ளிட்டவற்றை முறையாக கடைப்பிடிப்பதால் 73 வயதிலும் நீரிழிவு நோய் இருந்தாலும் அவை கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. உணவு உட்கொள்வதையும் முறைப்படுத்தி உள்ளேன். குறிப்பாக இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் சர்க்கரை அளவு கூடும் என்று சிலர் கூறுவதால், இரவு சாப்பாட்டையும் இரவு 7 மணிக்குள் முடித்து கொள்கிறேன். நீரிழிவு நோய்க்கும் மனதிற்கும் தொடர்பு இருப்பதால் மனதை போட்டு குழப்பி கொள்ளாமல் எப்போதும் சந்தோஷமாக வைத்து கொள்கிறேன். தேவையில்லாத டென்சன் போன்றவற்றையும் விட்டு உள்ளேன். தற்போது நீரிழிவு நோய் இருந்தாலும் நன்றாக இருந்து வருகிறேன்' என்றார்.
சம்பா ரவை, குதிரை வாலி
குரோம்பேட்டையைச் சேர்ந்த கே.மணி கூறும்போது, 'டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்து கொள்வதால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. உணவு முறையில் அரிசி சாப்பாட்டுக்கு பதிலாக சம்பா ரவை, குதிரை வாலி போன்ற உணவுகளை அதிகம் எடுத்து வருகிறேன். இதுதவிர மருந்துகள் அதிகம் எடுப்பதால் வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதால் டாக்டர்களின் ஆலோசனைப்படி வைட்டமின் மருந்துகளையும் எடுத்து வருகிறேன். நடை பயிற்சி செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துவதால் பாதியில் நிறுத்தியிருந்த நடை பயிற்சியையும் மீண்டும் தொடங்கி உள்ளேன்' என்றார்.