ராகுல்காந்தி தேச துரோகியா? - எச்.ராஜாவுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
|அரசியலையும், மாநாட்டையும் பிரித்து பார்க்க முடியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
சென்னை,
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜகவின் வழிகாட்டுதல் குழு தலைவராக இருக்கக்கூடிய எச்.ராஜா தொடர்ந்து வன்மமாக பேசுவார் என்பது தமிழ்நாட்டு மக்கள் அறிந்தது. ஆனால், தற்போது ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சையெல்லாம், திரித்து பேசுகிறார். ராகுல் காந்தியை தேச துரோகி என்கிறார். இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயலை அவர் கைவிட வேண்டும்.
யார் தேசத்துரோகி? யார் தேசத்திற்கு எதிராக செயல்பட்டார்கள்? என்பதை அவர் தெரிந்துகொண்டு பேச வேண்டும். இனிவரும் காலங்களில் ராகுல் காந்தி பற்றியோ, காங்கிரசை பற்றியோ ஆதாரங்கள் இல்லாமல் கொச்சைப்படுத்தினால், அவர் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் முற்றுகைப்போராட்டத்தை நாங்கள் நடத்துவோம். இது எச்.ராஜாவுக்கு நாங்கள் விடுக்கும் கடைசி எச்சரிக்கையாகும்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு இதுவரையில் அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழக தலைவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்போம். அரசியலையும், மாநாட்டையும் பிரித்து பார்க்க முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் கிடையாது. அனைத்துமே அரசியல்தான். இவ்வாறு அவர் கூறினார்.