< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா?
அரியலூர்
மாநில செய்திகள்

'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?

தினத்தந்தி
|
3 Nov 2022 11:17 PM IST

மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', ‘ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது ‘ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.

ஒரே போலீஸ் சீருடை

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு கடந்த 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைத்துக்கொள்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல் டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சாத்தியம் இல்லை

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:- மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.

நடைமுறைக்கு பொருந்தாது

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:- ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.

இதேபோல் மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.

வரவேற்கத்தக்கது

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்த கல்வியாளர் ஆரோக்கியராஜ்:- நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படுவது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இந்திய போலீசார் என்று ஒற்றை வார்த்தையில் அழைக்கும் போது நாட்டின் மிடுக்கு இன்னும் கூடுகிறது. அதே நேரம் தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் போலீசாருக்கு தனிப்பட்ட சங்கங்கள் எதுவும் இல்லை. எனவே அவர்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரே சீருடை என்கிற திட்டத்தை அமல்படுத்தும் போது நாடு முழுதும் உள்ள போலீசாரின் உரிமைகளை அவர்கள் கேட்டு பெறுவதற்கான நாடு தழுவிய அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

எளிதில் அடையாளம் காண வழி

விக்கிரமங்கலத்தை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர் விக்னேஷ்:- நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிசீலனையில் உள்ளது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் இன்று பல்வேறு மாநிலங்களில் போலீசாருக்கு பல விதங்களில் உடைகள் உள்ளன. நாடு முழுமைக்கும் ஒரே சட்டத்தை கடைபிடிக்கும் போது போலீசாருக்கு ஒரே சீருடை என்பதை கொண்டு வருவது நல்ல விஷயமாகவே நான் கருதுகிறேன். மேலும் இதனால் இந்தியாவில் எங்கு சென்றாலும் போலீசாரை எளிதில் அடையாளம் காண்பதற்கு இது ஒரு சிறந்த வழி. ஆனால் டிரைவர்கள், போஸ்ட்மேன் போன்றவர்கள் காக்கி நிற உடைகளை பயன்படுத்துகிறார்கள். எனவே காக்கி நிறத்தை மாற்றி வேறு நிறத்தில் போலீசாருக்கு உடைகளை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கம்பீர அடையாளம்

தா.பழூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா:- நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்கப்படுவது சிறப்பாக இருக்கும். அனைத்து மாநில போலீசாருக்கும் இந்திய போலீசார் என்கிற கம்பீர அடையாளம் கிடைக்கும். அனைத்து போலீசாரின் சீருடைகளிலும் இதயப்பகுதியில் இந்திய தேசியக் கொடியும், தேசிய சின்னமும் பொறிக்கப்பட வேண்டும். இது சீருடையின் அந்தஸ்தை இன்னும் மேம்படுத்துவதோடு சீருடையில் இருக்கும் போலீசாரின் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்