< Back
மாநில செய்திகள்
காலில் விழுகிறேன் என சொல்லிவிட்டேன்...! - திருப்பூரில் மீண்டும் சம்பவம்; தமிழரை மிரட்டும் வட மாநிலத்தவர்கள்...? - போலீசார் விளக்கம்
மாநில செய்திகள்

'காலில் விழுகிறேன் என சொல்லிவிட்டேன்...!' - திருப்பூரில் மீண்டும் சம்பவம்; தமிழரை மிரட்டும் வட மாநிலத்தவர்கள்...? - போலீசார் விளக்கம்

தினத்தந்தி
|
3 Feb 2023 3:04 AM GMT

'பள்ளிக்கூடத்தில் குழந்தை நிற்கிறாள். காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் என்று சொல்லிவிட்டேன்' என்று அந்த வீடியோவில் தமிழர் கூறுகிறார்.

திருப்பூர்,

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூரில் தொழிற்சாலை ஒன்றில் தமிழர்களை வட மாநிலத்தவர்கள் ஓடஓட விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழர்களை வட மாநிலத்தவர்கள் தாக்கி விடட்டியடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் இரு நபர்களுக்கு இடையே டீக்கடையில் சிகிரெட் புகைப்பதில் தமிழர்கள், வடமாநிலத்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இந்த மோதல் இனவாதத்தை தூண்டும் வகையில் வீடியோவாக பரப்படுகிறது என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், திருப்பூரில் வடமாநிலத்தவர்களின் அத்துமீறலாக மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழரின் பைக்கை மிரட்டி வாங்கி வைத்துக்கொண்டு அவரிடமிருந்து பணத்தையும் வடமாநிலத்தவர்கள் பெருவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில் தமிழரை வடமாநிலத்தவர் மிரட்டுவது பதிவாகியுள்ளது. வாகன விபத்து தொடர்பாக தமிழரிடம் வடமாநிலத்தவர்கள் அத்துமீறியது தெரியவந்துள்ளது.

அந்த வீடியோவில் தமிழரின் பைக் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு வடமாநிலத்தவர் மிரட்டுவதும், அவரிடம் தமிழர் கெஞ்சும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

வீடியோவில் தமிழர் கூறியதாவது:-

குழந்தை நிற்கிறால்... தயவு செய்து...நாளை வந்து நான் பேசிக்கொள்கிறேன் என்கிறேன். காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் என கூறிவிட்டேன். பள்ளிக்கூடத்தில் குழந்தை நிற்கிறால்... 500 ரூபாய் அனுப்பிவிட்டேன். லைட் இல்லை நீ வேண்டுமானால் சோதித்து பார்த்துக்கொள்... தயவு செய்து கேட்டுவிட்டேன்... கெஞ்சி கேட்டுவிட்டேன்... இதற்கு மேலே என்ன செய்ய.. என்று அந்த நபர் (தமிழர்) வடமாநில இளைஞரிடம் கேட்கிறார்.

இதனை தொடர்ந்து தமிழரின் பைக்கை பறித்துக்கொண்டு பைக் மீது இருந்தவாறு வடமாநில இளைஞர் இந்தி மொழியில் ஏதோ பேசிக்கொண்டு தமிழரின் பைக்கை எடுக்க முயற்சிக்கிறார்.

அப்போது, அந்த நபர் (தமிழர்) பிளீஸ், பிளீஸ் என்று கெஞ்சுகிறார். நீ என்னுடன் வா... என்கிறார். அப்போது தமிழரிடம் போனை கொடு என்று வடமாநில இளைஞர் மிரட்டுகிறார்.

அதற்கு போனை கொடுத்தால் என்ன செய்வது என்று அந்த நபர் கேட்கிறார். ஆனால், பைக்கில் அமர்ந்திருந்தவாறு வடமாநில இளைஞர் மிரட்டும் தோணியில் இந்தியில் பேசுகிறார்.

சரி நீ கூட வா... நான் வருகிறேன் வா... என்று அந்த நபர் கெஞ்சி கேட்கிறார். கூட வாஜி அந்த அக்காவிடம் பேசிக்கொள்ளலாம் என்று அவர் பேசுகிறார்.

அப்போது அந்த வடமாநிலத்தவர் சுற்றி நின்று கொண்டிருந்த வடமாநிலத்தவர்களிடம் இந்தியில் ஏதோ பேசுகிறார். ஆனால், தொடர்ந்து அந்த நபர் தயவு செய்து என்னுடன் வா... பள்ளிக்கூடத்திற்கு நான் வருகிறேன் என்று கெஞ்சி கேட்கிறார். ஆனால், வடமாநில இளைஞர் தொடர்ந்து மிரட்டும் வகையில் பேசி வந்தார்.

அப்போது அங்கு வந்த மற்றொரு உள்ளூர் தமிழரிடம் பாதிக்கப்பட்ட நபர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், அண்ணா திரும்பும்போது பைக்கில் லைட் எரியவில்லை. வண்டி மேலே மோதிவிட்டது செல்போனில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

அதற்கு 300 ரூபாய் கேட்டார்கள்... பின்னர் 500 ரூபாய் கேட்டார்கள் 500 ரூபாய் அனுப்பிவைத்துவிட்டேன். புள்ளை பிளஸ் 2 படிக்கிறது. 8 மணிக்கு சிறப்பு வகுப்பு (ஸ்பெசல் கிளாஸ்). போனுக்கண்ணா என்னென்னமோ பேசுகிறர்கள் அண்ணா என்று அந்த நபர் கூறிகிறார்.

அப்போது அந்த உள்ளூர் நபர் (தமிழ்) பைக்கில் அமர்ந்திருந்த வடமாநில இளைஞரிடம் பேசினார். அப்போது குறுக்கிட்ட அந்த நபர் (தமிழ்), வண்டி இல்லைணா நடந்து வந்த பையன் மேலே அண்ணா என்று கூறிகிறார்.

வண்டி என் வண்டி அண்ணா, அங்கே நிற்கிது பாருங்க... 500 ரூபாய் கொடுத்துவிட்டேன் மறுபடியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சொல்கிறேன் கெஞ்சி கேட்கிறேன். தப்பு செய்தால் நான் போகமாட்டேன். சாவியை கொடுக்க சொல்லுங்கள் அண்ணா. சாவியை கொடு. இந்த இருட்டிற்குள் வந்து தான் விட்டுவிட்டேன் தப்பா எல்லாம் பேசாதே. எவ்வளவு தூரம் கெஞ்சி கேட்கனுமோ கேட்டுவிட்டேன்' என்று தமிழர் வடமாநிலத்தவரிடம் கெஞ்சி கேட்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சூழ்நிலையில், தமிழரிடம் வடமாநில கும்பல் பணம் பறிப்பது போல் வெளியான வீடியோ வதந்தி என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொங்குபாளையம் ரோட்டில் 3 நாட்களுக்கு முன்பு மாலையில் நடந்த சிறிய வாகன விபத்து சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் சம்பத்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, பொங்குபாளையம் ரோட்டில் வடமாநில தொழிலாளர் மீது இடித்துவிட்டதில், விபத்தில் கீழே விழுந்த வடமாநில தொழிலாளரின் செல்போன் சேதமடைந்தது.

அந்த செல்போனை சரி செய்ய பண உதவி கேட்டுள்ளார். அதை சம்பத்குமார் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இதை அவரே வாக்குமூலமாக வீடியோவில் பதிவிட்டுள்ளார். இதை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களில் 'மோட்டார் சைக்கிளை பிடுங்கி அட்டகாசம், தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித்த வடமாநில கும்பல்' என தவறான பதிவுகளை பரப்புகிறார்கள். இந்த வதந்தியை நம்ப வேண்டாம். அது பொய்யானது. இவ்வாறு வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்