அரியலூர்
பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
|மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
வெண்மை புரட்சி
கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.
இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.
விலை உயர்வு
இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுமக்கள் கருத்து
பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பால் முகவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
வரவேற்கத்தக்கது
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த பால் விற்பனை செய்யும் ராஜேந்திரன்:- மாடுகளை பராமரிக்கவும், தீவனங்களை வாங்கவும் சிரமம்பட்டு வந்தோம். எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தோம். இந்தநிலையில் பால் கொள்முதல் விலையை அரசு தற்போது ரூ.3 உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்தவிலை விவசாயிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டீ, காபி விலை உயரும்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் டீக்கடை நடத்தி வரும் தங்கவேல்:- தற்போது உயர்த்தப்பட்டுள்ள பால் விலையினால் எங்களைப் போன்ற டீக்கடை வைத்துள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கிராமப்புறங்களில் ரூ.8 முதல் ரூ.10 வரை டீ விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நகர்ப்புறங்களில் ரூ.10 முதல் ரூ.12 வரை டீ விற்கப்படுகிறது. தற்போது உயர்ந்துள்ள பால் விலையினால் டீ, காபி மற்றும் பார்சல் போன்றவை விலை உயரக்கூடும். இது சாதாரண ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே தமிழக அரசு பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
வரப்பிரசாதம்
உடையார்பாளையத்தை சேர்ந்த விவசாயி முருகன்:- மாடுகளுக்கான தீவனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாலின் விலை கட்டுப்படியாகவில்லை. தற்போது தமிழக அரசு பால் லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தி உள்ளது. இருந்தாலும் தனியார் பால் நிறுவனங்கள் கொடுக்கும் விலையை போல் தமிழக அரசு கொடுக்க வேண்டும். இருப்பினும் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இவ்வாறு அவர்கள் கூறினர்.