திண்டுக்கல்
ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அவசியமா?
|அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
காகித பணம்
பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.
அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.
ரூபாய் நோட்டுகள்
இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.
இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.
லட்சுமி, விநாயகர் உருவப்படம்
இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவப்படங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து திண்டுக்கல் மக்களின் கருத்துகள் வருமாறு:-
மக்களை பிளவுபடுத்தும்
ஆம்ஆத்மி மாவட்ட தலைவர் பிரபாத் (திண்டுக்கல்) :- அரவிந்த் கெஜ்ரிவால் சாதி, மத வேறுபாடு இல்லாத தலைவராக திகழ்கிறார். பிரதமர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடும் தகுதி படைத்தவர். ஒரு போதும் மக்களை வேறுபடுத்தி பார்க்கமாட்டார். பா.ஜனதாவினர் சவார்க்கரின் உருவப்படத்தை ரூபாய் நோட்டில் வைப்பதற்கு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதை தடுக்கும் வகையில் லட்சுமி, விநாயகர் உருவபடங்களை வைக்கும்படி கூறியிருப்பார் என நினைக்கிறேன். மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. அனைத்து தரப்பினரும் சிரமத்தில் இருக்கின்றனர். எனவே நாட்டின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனும் ரீதியில் அவர் கூறியிருக்கிறார்.
வக்கீல் முகமது இக்பால் (திண்டுக்கல்):- உலகின் பெரிய ஜனநாயக நாடு எனும் பெருமையை கொண்டது நமது இந்தியா. சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் இந்தியர் என்று வாழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ரூபாய் நோட்டில் மகாத்மாகாந்தியின் உருவப்படம், இந்தியாவின் நினைவு சின்னம், பாரம்பரிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. அது அப்படியே நீடிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு கருத்துகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும். மக்களை பிளவுபடுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
தேவை இல்லை
வெள்ளரி ஏற்றுமதியாளர் முருகராஜ் (செந்துறை):- இந்திய விடுதலைக்காக பல தியாகங்களை செய்தவர் மகாத்மாகாந்தி. அவருடைய உருவப்படம் ரூபாய் நோட்டில் இருப்பதே அனைவருக்கும் பெருமை. ஆனால் லட்சுமி, விநாயகர் உருவப்படங்களை அச்சிட்டால் பிற மத கடவுள்களின் உருவப்படமும் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். இதனால் தேவையற்ற சர்ச்சைகள் எழுந்து, மக்களின் ஒற்றுமையை குலைத்துவிடும். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். மக்களிடம் வேற்றுமையை ஏற்படுத்தும் எந்த செயலையும் அரசு ஏற்க கூடாது.
தொழில் அதிபர் ராபர்ட் (திண்டுக்கல்) :- இந்தியா ஒரு ஜனநாயக மற்றும் மதசார்பற்ற நாடு. இங்கு பல்வேறு சாதி, மத, மொழி, இன மக்கள் வாழ்கின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இதேபோல் ஒவ்வொரு மதத்தினரும், தங்களுடைய கடவுளின் படத்தை அச்சிட வேண்டும் என்று கூறினால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும். எந்த ஒரு மதத்தின் அடையாளமும் இல்லாத வகையில், அனைவரும் விரும்பும் விதத்தில் தற்போது ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வருகிறது. அந்த நிலையே தொடர வேண்டும். நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும், நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் நலத்திட்டங்களும் ஏராளமாக உள்ளன. இந்த சூழலில், இது தேவையற்றது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது ஆகும்.
உள்நோக்கத்துடன் சொல்லியிருக்கலாம்
பொருளாதார விமர்சகர் சோம.வள்ளியப்பன்:-
பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்பெருக்கத்துக்கும், லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்பிக்கை ரீதியில் அவர் சொல்லியிருக்கலாம். அரவிந்த கெஜ்ரிவால் நன்கு படித்தவர். அவர் வேறு ஒரு உள்நோக்கத்துக்காக தான் இதை சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். உலகத்தில் முன்னேறிய நாடுகள்கூட இப்படி முயற்சித்தது கிடையாது. மதிப்புமிக்க, வணங்கக்கூடிய இறைவனை இப்படி பயன்படுத்துவது சரியாக இருக்காது. மற்ற மதத்தினரும், இப்படி தங்கள் கடவுளை அச்சிடச் சொன்னால் என்ன செய்வார்கள்?. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்வதாகவே நான் கருதுகிறேன். இதன்மூலம் வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அதுவும் நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.