புதுக்கோட்டை
கறம்பக்குடி பகுதியில் குறுவை சாகுபடி தப்புமா?
|கறம்பக்குடி பகுதியில் உள்ள காவிரி கிளை வாய்க்கால்கள் தண்ணீர் வராமல் வறண்டு கிடப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி தப்புமா? என விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
கிளை வாய்க்கால்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் கலியராயன்விடுதி, காட்டத்தி, ராங்கியன் விடுதி, குளந்திரான்பட்டு, கிளாங்காடு, முதலிப்பட்டி, கீராத்தூர் உள்ளிட்ட 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம், செல்லம்பட்டி உழவயல் கல்லணை கால்வாயில் இருந்து துணை வாய்க்கால்கள் மூலம் கறம்பக்குடி பகுதிக்கு காவிரி நீர் செல்கிறது.
இதன்மூலம் கறம்பக்குடி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பாசன குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
வறண்டு கிடக்கிறது
இந்நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி வழக்கம்போல் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கல்லணை கால்வாயில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பிரதான கால்வாயில் தண்ணீர் சென்ற நிலையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் கறம்பக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான கிளை வாய்க்கால்களுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. வாய்க்கால்கள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. இதேபோல் பாசன குளங்களும் நீர் இன்றி காய்ந்து போய் உள்ளது.
குறுவை சாகுபடி தப்புமா?
கடந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பணிகள் ஜூன் மாதத்திலேயே தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது பல பகுதிகளில் உழவு மற்றும் நடவு பணிகள் தொடங்கப்படவில்லை. பல விவசாயிகள் வயல்களை தயார் செய்து தண்ணீர் வரத்துக்காக காத்து உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டி உள்ள கலியராயன் விடுதி, காட்டாத்தி, செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டைப்போல் தண்ணீர் தடை இன்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் வழக்கம்போல் தொடங்கி விட்டனர். ஆனால் அப்பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பாசன குளங்களும் நிரம்பாத நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி தப்புமா என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்
இதுகுறித்து கறம்பக்குடி காவிரி பாசன பகுதி விவசாயிகள் கூறுகையில், காவிரியில் வெள்ளம் கரை புரண்டு சென்ற காலத்திலேயே கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை. கடந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மேட்டூர் அணை நீர்மட்டம் சீராக இருந்ததாலும் தண்ணீர் தடை இன்றி கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டும் தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அணை திறக்கப்பட்டும் மடை திறக்கப்படாததால் பல உப வாய்க்கால்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. அரசு கண்டு கொள்ளாத நிலையில் விவசாயிகளே வாய்க்கால்களை சீரமைத்து வைத்திருந்தோம். ஆனால் தண்ணீர் வராதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது. எனவே கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து கல்லணை கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினர்.