பெரம்பலூர்
கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளை நிறுத்திவைப்பது சரியா?
|கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளை நிறுத்திவைப்பது சரியா? என்பது குறித்து பேராசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இயற்பியலும், வேதியியலும் இந்தியாவிற்கு நோபல் பரிசுகள் பெற்றுத்தந்தன. கணிதம் நமக்கு ராமானுஜம் என்ற மேதையை உருவாக்கி தந்தது. அத்தகைய சிறப்புவாய்ந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க ஒருகாலத்தில் மாணவர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவியது.
கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கல்லூரிகளில் படிப்பதாக இருந்தால் அமைச்சர்கள் வரை சிபாரிசு தேவைப்பட்டது. இப்படி இருந்த கணிதம், இயற்பியல் துறை தற்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் அந்தப்பாடப்பிரிவுகளை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-
போட்டி தேர்வுகள்
பெரம்பலூர் மாவட்ட பி.எஸ்சி., கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை சேர்ந்த இணை பேராசிரியர்கள்:- முன்பெல்லாம் பி.எஸ்சி. கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காமல் மாணவ-மாணவிகள் வேறு பாடப்பிரிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மேற்கண்ட பாடப்பிரிவுகளை கூப்பிட்டு கொடுத்தால் கூட சேருவதற்கு மாணவ-மாணவிகள் தயங்குகிறார்கள். பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் படித்தால் டி.என்.பி.எஸ்.சி.யில் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் அந்த பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகு பி.எஸ்சி. கணிதம், இயற்பியல் படிக்கக்கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஏனென்றால் கஷ்டப்பட்டு படிப்பதற்கு மாணவ-மாணவிகள் விரும்புவதில்லை. இதனால் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் பாடப்பிரிவுகள் நிறுத்தி வைக்கப்படுவது சரியான முடிவு கிடையாது. இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியில் கணிதம் பாடப்பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியிலும் இந்த கல்வியாண்டில் கணிதம் பாடப்பிரிவுக்கு குறைந்தளவு மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதேநிலை நீடித்தால் அடுத்த கல்வி ஆண்டில் பெரம்பலூர் அரசு கல்லூரியில் கணித பாடப்பிரிவு நிறுத்தி வைக்கப்படலாம். பி.எஸ்சி. கணிதம் படித்தால் என்ஜினீயர் படிப்பு படித்து செல்லக்கூடிய சாப்ட்வேர் கம்பெனி உள்ளிட்டவைக்கு வேலைக்கு செல்லலாம்.
கணித பாடப்பிரிவில் சேர சிபாரிசு
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை சேர்ந்த பிரியதர்ஷினி:- நான் பி.எஸ்சி. கணிதம் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு தற்போது அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறேன். நான் கல்லூரி படிக்கும் போது பி.எஸ்சி. கணிதம் பாடப்பிரிவுக்கு அவ்வளவு மவுசு உண்டு. அந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனி கெத்து இருக்கும். நன்றாக படிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் என்று பெயரும் இருக்கும். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கல்லூரியில் கணித பாடப்பிரிவில் சேருவதற்கு யாராவது சிபாரிசு செய்தால் மட்டுமே இடம் கிடைக்கும். போட்டி போட்டு கொண்டு கணித பாடப்பிரிவில் மாணவ-மாணவிகள் சேர்வார்கள். தற்போது மாணவர் சேர்க்கை இல்லாததால் சில கல்லூரிகளில் அந்த பாடப்பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. தற்போதைய மாணவ-மாணவிகள் கஷ்டப்பட்டு படிக்க விரும்பாததால் கணித பாடப்பிரிவை எடுப்பதில்லை. தற்போது படித்த படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைப்பதில்லை. இதனால் பெயருக்கு ஏதாவது இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசின் போட்டி தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகள் தயராகி வருகின்றனர். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொற்ப ஊதியம்
குன்னம் தாலுகா, மழவராயநல்லூரை சேர்ந்த பாஸ்கர்:- நான் பி.எஸ்சி. இயற்பியல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு தற்போது அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறேன். முன்பு ஒரு காலத்தில் என்ஜினீயர் படிப்பிற்கு அதிக மவுசு இருந்த போதும், இல்லாத போதும் பி.எஸ்சி. இயற்பியல் படிப்பிற்கான மவுசு குறையாமல் இருந்தது. கஷ்டப்பட்டு பி.எஸ்சி. இயற்பியல் பி.எட். படித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூட அரசு ஆசிரியர் பணி கிடைப்பதில்லை. தனியார் பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு சேர்ந்தாலும் சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. இதனால் எளிமையான பாடப்பிரிவை எடுத்து படித்து விட்டு அரசின் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் பாடப்பிரிவில் சேர மாணவர்கள் விரும்பாததால், சில கல்லூரிகளில் அந்த பாடப்பிரிவு நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்புகள்
பாலையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கவியரசன்:- கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் சேர்வதை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதையே அதிகம் விரும்புகின்றனர். மேலும் குறைந்த செலவில் படித்து அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் அதிகம் சேர்கின்றனர். குறிப்பாக கணிதம் மற்றும் இயற்பியல் துறை மிகவும் முக்கியமான பாடப்பிரிவுகளாகவும், மேல் படிப்பு படிக்கும் பொழுது வேலை வாய்ப்புகளுக்கும் மிகவும் உதவுகிறது. எனவே பொது அறிவுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவை அனைத்து கல்லூரிகளிலும் நிறுத்தி வைக்காமல் சேர்க்க வேண்டும்.
கணிதம், இயற்பியலுக்கு பதில்
கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள்:- ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப்பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், கூடலூர், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டமலை அரசுக்கல்லூரியில் ஆங்கில வழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றிக் கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்கு பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.