< Back
மாநில செய்திகள்
கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளை நிறுத்திவைப்பது சரியா?
அரியலூர்
மாநில செய்திகள்

கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளை நிறுத்திவைப்பது சரியா?

தினத்தந்தி
|
3 July 2023 12:00 AM IST

கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளை நிறுத்திவைப்பது சரியா? என்பது குறித்து பேராசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயற்பியலும், வேதியியலும் இந்தியாவிற்கு நோபல் பரிசுகள் பெற்றுத்தந்தன. கணிதம் நமக்கு ராமானுஜம் என்ற மேதையை உருவாக்கி தந்தது. அத்தகைய சிறப்புவாய்ந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க ஒருகாலத்தில் மாணவர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவியது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கல்லூரிகளில் படிப்பதாக இருந்தால் அமைச்சர்கள் வரை சிபாரிசு தேவைப்பட்டது. இப்படி இருந்த கணிதம், இயற்பியல் துறை தற்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் அந்தப்பாடப்பிரிவுகளை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர், மாணவி ஆகியோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

எளிமையான பாடம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் ராஜமூர்த்தி:- கணிதத்துறையில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் சரிந்து வருகிறது. இதற்கு காரணம் கணிதத்தை மாணவர்கள் கடினம் என்று நினைப்பதாகும். ஆனால் கணிதம் மிகவும் எளிமையான பாடமாகும். எளிதாக மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். கணித பாடத்தில் மட்டுமே மாணவர்கள் சலிப்படையாமல் கற்க முடியும். கணிதப்பாடம் அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் தாயாகும். கணிதம் இல்லாமல் எந்த அறிவியலையும் கற்க முடியாது. மேலும் கணிதப்பாடத்தில் அதிகளவு வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. கணிதப்பாடம் படித்தால் தகவல் தொடர்புத்துறை, வானிலை அறிவிப்புத்துறை, புள்ளியியல் துறை, மத்திய அரசுத்துறைகளுக்கு எளிதாக வேலைக்கு செல்ல முடியும். மேலும் மற்ற துறைகளைக்காட்டிலும் ஆசிரியர் பணியிடங்களில் கணித துறைக்கு அதிகளவு வேலைவாய்ப்புகள் உள்ளன. வங்கி துறைப்பணிகளுக்கு கணித பாடத்தை சரியாக படித்தால் எளிதாக வங்கி அதிகாரி பணியை பெற முடியும். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அல்லது மத்திய அரசு தேர்வாணையங்களில் கணித பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து எளிதாக தேர்ச்சி பெறலாம். எதிர்வரும் காலங்களில் கணித துறைக்கு அதிகளவு வேலைவாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் குவிந்துள்ளன. மாணவர்கள் கணிதத்தை கடினம் என நினைக்காமல் அதனை புரிந்து கொண்டு படித்தால் மிக எளிமையாக அதிக மதிப்பெண் எடுக்கலாம். எனவே மாணவர்கள் கணித துறையை தேர்ந்தெடுத்து சிறந்த வேலைவாய்ப்பில் அமர நிறைய வாய்ப்பு இருக்கிறது.

திறமையற்ற சமுதாயம்

ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த பெற்றோர் ராஜேந்திரன்:- தற்போதைய சூழலில் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் போன்ற கடினமான பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் சேர்வது குறைந்து வருவதை நினைக்கும் பொழுது ஒரு திறமையற்ற சமுதாயம் எதிர்காலத்தில் உருவாகி வருகிறதோ என நினைக்க தோன்றுகிறது. ஏனென்றால் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு கணிதமும், இயற்பியலும் மிகவும் அதிகமாக தேவைப்படும் பாடப்பிரிவுகள். இதனை எடுத்து படிப்பதற்கு மாணவர்கள் முன் வரவில்லை என்பதை பார்க்கும் பொழுது கடினமான பாடப்பிரிவுகளை கஷ்டப்பட்டு படிப்பதற்கு இன்றைய மாணவர்கள் தயாராக இல்லை என்பதாகவே தோன்றுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தொடர்ந்து தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாததுமே இப்படி திறமையற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்கி வருகிறது என நான் கருதுகிறேன். எனவே அரசு திறமையான மாணவர்களை உருவாக்குவதற்கு வழிவகைகளை செய்ய வேண்டும்.

எதிர்காலம் பாதிக்கும்

தா.பழூர் மதனத்தூரில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இளங்கலை பயில விரும்பும் மாணவி ஜெயசூர்யா:- பிளஸ்-2 படித்து முடித்தவுடன் தொழில்நுட்ப பிரிவு படிக்கும் வாய்ப்பு இல்லாத நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தங்களது அடுத்த தீர்வாக இளங்கலை அறிவியல் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பார்கள். அறிவியல் சார்ந்த அனைத்து பாடங்களுக்கும் மேல் படிப்புகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மேற்கண்ட பாடப்பிரிவுகள் தான். கடந்த பல ஆண்டுகளாக இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகள் கல்லூரிகளில் இயங்கி வந்த நிலையில் தற்போது அவற்றை முடக்கலாமா? என்று கல்வித்துறை யோசிப்பதாக எங்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வருகின்றன. ஆனால் எங்களை போன்ற மாணவ-மாணவிகளுக்கு இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களை தேர்ந்தெடுப்பது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லக்கூடிய ஒன்றாக கருதுகிறோம். எனவே அறிவியல் பாடப்பிரிவுகள் எங்களுக்கு கிடைப்பது எங்களது உரிமை. எங்களது கல்வி உரிமை எந்த வகையிலும் பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கனவே கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் சரியான அளவில் படிக்க முடியாத சூழ்நிலையில் மீண்டும் இது போன்ற கல்வித்துறையின் தவறான முடிவு எங்களது எதிர்காலத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

கணிதம், இயற்பியலுக்கு பதில்

கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள்:- ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப்பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், கூடலூர், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டமலை அரசுக்கல்லூரியில் ஆங்கில வழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றிக் கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்கு பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்