கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கேட்பது சரியா? கல்வியாளர், ஆசிரியர்கள் கருத்து
|கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதா என்பது குறித்து கல்வியாளர், வக்கீல், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைக்கும் போது, கல்வியை மத்திய பட்டியலில், மாநில பட்டியலில் அல்லது பொது பட்டியலில் இவற்றில் எதில் சேர்ப்பது என்பது நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதியில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதுதான் சரியானது என்று முடிவு செய்து, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்தனர்.
இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அமலில் இருந்த அவசர காலகட்டத்தில் (எமர்ஜென்சி) காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவியல், விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு ஆகிய 5 முக்கிய துறைகள் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இது ஒத்திசைவுப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.
சர்தார் ஸ்வரண்சிங் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் இந்த துறைகளின் அதிகாரங்களில் மாநில சட்டப்பேரவைகளுக்கு இருந்த முழு அதிகார வரம்பு, பொதுப் பட்டியலுக்கு மாறியது.
மீண்டும் கொண்டு வரவேண்டும்
மாநில அரசுகளின் எந்தவித முன் அனுமதியும் இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், அவசர காலத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்று அப்போது முதல் தற்போது வரை விமர்சனத்துக்குள்ளாகிய வண்ணமே இருக்கின்றன.
கல்வித் துறையை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் இதற்கு முன்பு முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி பல ஆண்டுகளாக வலுத்துக் கொண்டே இருந்தாலும், தற்போது வரை கல்வி பொதுப் பட்டியலிலேயே நீடித்து வருகிறது.
கல்வி மாநிலப் பட்டியலில் இல்லாமல், பொதுப் பட்டியலில் இருப்பதால் தான், நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவை மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரதமரிடம் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்
இதுதவிர, இதுதொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 11.11.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பான கோரிக்கையையும் வலியுறுத்தினார்.
அதில், 'அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த போது முதலில் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அவசர காலத்தின் போது அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், குறிப்பாக பிரதமரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது பற்றி, கல்வியாளர், வக்கீல், ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-
கூட்டாட்சி தத்துவம்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், '1976-ல் கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு செல்வதற்கு முன்பு, மாநில பட்டியலில் இருந்த வரை மாநில அரசு கல்லூரிகள், பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வந்தது. எப்போது பொதுப்பட்டியலுக்கு அது சென்றதோ, அப்போதில் இருந்து கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி அதிகம் இருந்தாலும், அதில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனைத்து சிறப்பு கல்வி நிறுவனங்களாகவே இருக்கின்றன. எல்லோரும் படிக்கக்கூடிய பொதுப் பள்ளிகள், கல்லூரிகளை மாநில அரசுதான் நடத்துகிறது. இதில் மாநில அரசின் பங்கை பார்க்கும்போது, பொறுப்பு மட்டும்தான் இருக்கிறது. அதனோடு சேர்த்து, அதிகாரத்தையும் கொடுக்கவேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குகின்ற போதே மக்களுக்கு உடனடியாக தேவைப்படும், கல்வி, சுகாதாரம் ஆகியவை மாநில அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. எனவே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுப்பதுதான் சரியானது. அதனைத் தான் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்' என்றார்.
சரியாக இருக்காது
ஆசிரியர் பி.ஜெயஸ்ரீ கூறும்போது, 'கல்வியை மாநிலங்களுக்கு மாநிலம் பிரித்துப் பிரித்துப் பார்க்காமல், ஏற்கனவே இருக்கும் நடைமுறையையே தொடர வேண்டும். அப்படி இதில் மாநிலங்களுக்கு பிரச்சினை இருக்குமானால், ஒரே தீர்வாக மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது சிறப்பாக இருக்கும். எனவே கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மொத்தமாக மாநில பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கை சரியாக இருக்காது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறதா? மாநில பட்டியலில் இருக்கிறதா? என்ற குழப்பம் மாணவர்களை தான் பெரியளவில் பாதிக்கும்' என்றார்.
தூண்டுகோலாக அமையும்
எத்திராஜ் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் தேன்மலர் பாரதி கூறுகையில், 'கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் விலைமதிப்பற்ற சொத்து. இந்த சொத்தை மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு அரும்பாடுபட்டு வருகிறது. பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழக அரசின் நிர்வாகத்தால் இன்று அவைகள் உயரிய இடத்தில் இருக்கிறது. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு என்று தனித்தனியாக பட்ஜெட்டை தமிழக அரசு கணிசமாக ஒதுக்கீடு செய்கிறது. நிதி ஒதுக்கீடாக இருந்தாலும், கல்வி வளர்ச்சியாக இருந்தாலும் தமிழக அரசின் முயற்சி சிறப்பாகவே உள்ளது. எனவே கல்வி மாநில பட்டியலில் இருப்பது சால பொருத்தமானது. மாநில பட்டியலில் இருந்தால்தான் எல்லா முடிவுகளையும் தமிழக அரசே எடுத்துவிட முடியும். முதல்-அமைச்சர் வலியுறுத்துவது போல் கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இது எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு மிகவும் தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை' என்றார்.
ஏற்புடையது அல்ல
அகில இந்திய தனியார் கல்லூரி பணியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் கார்த்திக் கூறும்போது, 'கல்வி ஏற்கனவே இருக்கும் பொதுப் பட்டியலில் நீடிப்பது தான் சரியானது. ஆனால் அதே நேரத்தில் கல்வியில் மாநிலங்களுக்கு இருக்கும் உரிமையையும் மத்திய அரசு பறிக்கக்கூடாது. பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியில் மத்திய அரசின் தலையீடும் அதிகம் இருக்கக்கூடாது. மாணவர்களுக்கான கல்வி கட்டணம், ஆசிரியர்களுக்கான ஊதிய நிர்ணயம், பள்ளி-கல்லூரிகளில் ஆய்வு நடத்துவது ஆகியவற்றில் நிபுணத்துவத்தை மாநில அரசு காட்டி, மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அது எதையும் நடைமுறைப்படுத்தாமல், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற கேட்பது ஏற்புடையது அல்ல. பொதுத்துறை பள்ளிகளை ஊக்குவிக்காத அரசு, மொத்தத்தில் அனைத்தையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்பது, தனியார்துறை வளருவதற்கு தான் மறைமுகமாக வழிவகுக்கும். மொத்தமாக மத்திய அரசின் கையிலோ, மாநில அரசின் கையிலோ சென்றால், அது மக்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும்' என்றார்.'
100-க்கு 100 சரியானது
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தாஸ் கூறுகையில், 'கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக எங்களுடைய சங்க கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி, முதல்-அமைச்சருக்கும், பிரதமருக்கும் அனுப்ப உள்ளோம். பள்ளிக்கல்வித் துறையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. கல்வித்துறையில் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையும் இல்லை. இதனை களைவதற்கு கல்வித் துறை மாநில பட்டியலுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். தமிழ்நாடு கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில், கல்வி மாநில பட்டியலுக்குள் வரும்போது, தமிழகம் இன்னும் தலை சிறந்த மாநிலமாக மாறும். மாநில சுய உரிமைக்கு கல்விதான் அடித்தளம். எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மத்திய அரசு தரவேண்டும். முதல்-அமைச்சர் வலியுறுத்தி கேட்டது 100-க்கு 100 சரியானதுதான்' என்றார்.
பொதுப்பட்டியலில் நீடிக்கவேண்டும்
ஐகோர்ட்டு வக்கீல் முத்துக்குமார் கூறும்போது, 'தேசிய கல்வி கொள்கையை பொறுத்தமட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரபல கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் இந்தியா முழுவதும் நடைபெறும் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும். இந்தியாவில் கல்வித்தரம் எப்படி இருக்க வேண்டும்? என்ற முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு உள்ளது. மாநிலக் கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் போதே தமிழக மாணவர்களால் சாதிக்க முடியவில்லை. குறிப்பாக நீட் உள்ளிட்ட தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிக குறைவாக உள்ளது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால்தான் மத்திய அரசின் பாடத்திட்டங்களைக் கொண்ட நவோதயா போன்ற பள்ளிகள் தமிழகத்தில் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. எனவே கல்வி என்பது பொதுப்பட்டியலில் தான் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும்' என்றார்.