பெரம்பலூர்
பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா? பொதுமக்கள் கருத்து
|பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆவின் நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் முதலில் பாட்டில்கள் மூலமே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.
தற்போது ஆவின் நிறுவனம் கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், நிலைப்படுத்தப்பட்ட பாலை பச்சை நிற பாக்கெட்டிலும், சமன்படுத்தப்பட்ட பாலை நீல நிற பாக்கெட்டிலும், இரு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலை மெஜந்தா நிற பாக்கெட்டிலும் தரம் பிரித்து, விற்பனை செய்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலமாக 29 லட்சம் லிட்டர் பாலை, ¼, ½, 1 லிட்டர்களில் 63 லட்சம் பாக்கெட்டுகளை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
ஐகோர்ட்டு யோசனை
பால் பாக்கெட்டுகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் திருப்பி ஒப்படைத்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வழங்கும் திட்டமும் ஆவின் அறிவித்திருந்தது. தற்போது அந்த நடைமுறை மருவிப்போய்விட்டது.
இதனால் அன்றாடம் பயன்படுத்தும் 63 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்திய பிறகு, குப்பை மேட்டுக்கு வந்துவிடுகின்றன. இவ்வாறாக சேரும் பிளாஸ்டிக் கவர்கள் பெரிய சீரழிவை பிற்காலத்தில் தரக்கூடியது.
ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு ஒரு யோசனையை தெரிவித்திருந்தது.
கண்ணாடி பாட்டிலில்...
ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது பற்றி ஆராயும்படி, அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது ஒரு பகுதியைத் தேர்வு செய்து அங்கு சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையிடமும், ஆவின் நிறுவனத்திடமும் கருத்துகளை கேட்பதாக, அரசு தரப்பு வக்கீல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விசாரணை மீண்டும் வருகிற 8-ந்தேதி வர இருக்கிறது.
சென்னை ஐகோர்ட்டு கூறியிருக்கும் இந்த யோசனை சாத்தியப்படுமா? என்பது பற்றி பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
முன் வரவேண்டும்
குன்னம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி பரமேஸ்வரி:- பாக்கெட்டில் பால் வழங்குவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி உடல் நலத்துக்கும் தீங்கானது. பாக்கெட்டுகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் மற்றும் நுண்நெகிழி ஆகியவை பாலில் கலப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னை உள்பட பல பெருநகரங்களில் சில சிறு தனியார் நிறுவனங்களே, சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டிலில் வெற்றிகரமாக பால் விற்பனை செய்து வருகின்றன. பாட்டிலில் பால் வழங்குவது பாதுகாப்பானதும், சாத்தியமானதும் மட்டுமின்றி, அரசுக்கு இதன்மூலம் குப்பை மேலாண்மையின் கணிசமான சுமை குறைகிறது. எனவே பாட்டிலில் பால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தயிர், மோர் போன்றவையும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. இவற்றையும், எண்ணெய் உள்ளிட்டவற்றையும் பாட்டிலில் விற்பனை செய்ய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும்.
திருமானூரை சேர்ந்த அமுதா:- பாட்டில்களில் பால் வழங்குவது, பாக்கெட்டில் பால் வழங்குவதை விட சிறந்தது. பாக்கெட்டில் பால் வழங்குவதால் மக்கள் பாலை உபயோகித்துவிட்டு, பாக்கெட்டை தூக்கி தெருவில் வீசுகின்றனர். இதனால் சுகாதாரம் மற்றும் மண்வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தெருவெங்கும் பிளாஸ்டிக் மயமாகவே காட்சியளிக்கிறது. பாட்டிலில் பால் வழங்கும்பட்சத்தில் தரமான முறையில் பதப்படுத்தி குளிரூட்டுதல் அவசியமாகிறது. சில காலத்திற்கு முன்பு வரை பெரும்பாலான பொருட்கள் கண்ணாடி பாட்டில் மூலமாகவே வழங்கப்பட்டு வந்தன. எனவே மீண்டும் அந்த நடைமுறையை கொண்டு வரலாம்.
விலை அதிகரிக்கும்
பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ெதாழில் முனைவோர் தாய் ஸ்டாலின்:- பாட்டில்களில் பாலை அடைத்து விற்பது சற்று கடினமான பணியாகும். பாட்டிலுக்கான தொகையை பொதுமக்களிடத்தில்தான் வசூல் செய்ய முடியும். மேலும் பாட்டில்களை கையாள்வதற்கு, அதிக இடம்பிடிக்கும். குளிர்பதன சாதனம் (பிரீசர்), மின்கட்டணம் ஆகியவற்றை கணக்கிட்டால் பால் விலை அதிகரிக்கும். ஆகவே பாட்டிலில் பாலை அடைத்து விற்பது எளியநடைமுறைக்கு சாத்தியமில்லை. சரியான மைக்ரான் அளவில் பாலித்தீன் பாக்கெட் வடிவத்தில் பால் விற்பனை செய்வது எளிது. பொதுமக்கள் கடைகளில் பால் பாக்கெட் வாங்கி தங்களது வீடுகளுக்கு எடுத்து செல்வது சுலபமாகும். ஆவின் பால் தரத்தில் சிறந்து விளங்குகிறது. ஆவின் பால் மற்றும் பால்பொருட்களுக்கு முகமதிப்பு உள்ளது. பெரம்பலூர் போன்ற நகரங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க ஆங்காங்கே ஏஜென்சிகளை அதிகரித்து, அவர்களுக்கு உரிய விற்பனை கழிவுத்தொகை, ஊக்கத்தொகை கொடுத்தால், ஆவின் பால் விற்பனை அதிகரிக்கும்.
சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்
அரியலூரை சேர்ந்த பால் விற்பனையாளர் ராஜப்பா:- முன்பு ஆவின் பால் பாக்கெட் கவரை திரும்ப கடைகளில் ஒப்படைக்கும்போது சிறிய தொகை வழங்கினார்கள். பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், பாக்கெட்டுகளுக்கு பதிலாக பாட்டிலில் பால் வழங்குவதுதான் நல்லது. கண்ணாடி பாட்டில்கள் உற்பத்தி செலவு அதிகமாகும். ஆனால் அதை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். குளிர்பானங்கள் பாட்டிலில் விற்கப்படுவது போன்று பாலையும் பாட்டிலில் விற்கலாம். சென்னையில் ஒரு நிறுவனத்தால் பாட்டிலில் தான் பால் வழங்கப்படுகிறது. பாட்டிலை திருப்பி கொடுக்கும்போது அதற்குண்டான விலையை கழித்து விடுகின்றனர். இதுபோன்ற நடைமுைறயில் பாட்டிலில் பால் விற்பனை செய்யலாம்.
பராமரிப்பு செலவு
பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்த தம்பு பாலாஜி:- பெருநகரங்களில் தொகை செலுத்தி பால் அட்டை பெற்றுக்கொள்பவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் வினியோகம் செய்யப்படுகிறது. அல்லது ஆவின் பூத்துகளில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. பெரம்பலூரில் பால் அட்டை பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் காலை-மாலை வேளைகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் பால் பண்ணைகளிலும் பால் விற்கப்படுகிறது. உடனுக்குடன் கறந்து விற்கப்படும் பாலை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பாட்டில்களில் பால் விற்பனை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. பாட்டில்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். எனவே பாக்கெட்டுக்கு பதிலாக பாட்டில்களில் பால் விற்பனை செய்வது என்பதைவிட, நேரடியாக பால் விற்பனை செய்யலாம்.