ஈரோடு
ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?- சட்டவல்லுனர்கள் கருத்து
|ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?- சட்டவல்லுனர்கள் கருத்து
நமது நாட்டில் தற்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும்.
அதாவது வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வாக்களிக்க முடியும்.
இது ஒன்றும் புதிது அல்ல
1967-ம் ஆண்டு வரை, இந்திய நாடாளுமன்றத்துக்கு, மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அப்போது வாக்குச் சீட்டுகள் மூலம், எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கு தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிகளில் ஒரே நேரத்தில் வாக்களிக்கப்பட்டு வந்து இருக்கிறது.
புரட்டிப் போட்டது
1968, 1969-ம் ஆண்டுகளில் அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், சில மாநிலங்களில் சட்டசபைகள் கலைக்கப்பட்டன. அதேபோல், 4-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் 1971-ம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், அதுவும் கலைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே (1970) தேர்தல் நடத்தப்பட்டது.
இது நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திவந்த முறையை புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இரு தேர்தல்களும் தனித்தனியாகவே நடத்தப்பட்டு வருகின்றன.
அதற்கு ஏற்ப மக்களில் மனங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. மாநிலப் பிரச்சினைகளை சட்டமன்ற தேர்தலின் போதும், மத்திய பிரச்சினைகளை நாடாளுமன்ற தேர்தலின் போதும் எதிரொலித்து வருகிறார்கள். அதாவது சட்டசபையில் ஒரு கட்சிக்கு ஓட்டுப்போடும் ஒருவர், நாடாளுமன்ற தேர்தலில் வேறு ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையும் இருக்கிறது.
வீண்செலவு
இவ்வாறு தனித்தனித் தேர்தல், அடிக்கடி நடைபெறுவதால், பல ஆயிரம் கோடி ரூபாய் வீண்செலவு ஏற்படுகிறது என்பதால் கடந்த 1983-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தல்களையும் மீண்டும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், மாநில அளவிலான கட்சிகள் அதை ஏற்கவில்லை.
தங்களின் தனித்துவம் பாதிக்கப்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன. என்றாலும், எதிர்ப்புக்கு மத்தியிலும், இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வந்தன.
ஒரே நாடு; ஒரே தேர்தல்
2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, "ஒரே நாடு; ஒரே தேர்தல்" கோஷம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. தற்போது, இந்த திட்டத்தை அமல்படுத்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2024) தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் இந்தச் சூழ்நிலையில், எல்லா மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு அதோடு சேர்த்து ஒரே தேர்தலாக நடத்தச் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? அது சரியா? அதற்கு என்ன சட்ட திருத்தங்கள் வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு பலர் சட்டநுணுக்கப் பதில்களை அளித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:
வீண் குழப்பத்தை ஏற்படுத்தும்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சாத்தியமா? என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறியதாவது:-
பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் என்றால் தேசிய அளவில் உள்ள பிரச்சினைகள், தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், சட்டசபை தேர்தல் என்றால் மாநிலங்கள் அளவில் நிலவும் பிரச்சினைகள் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சரியான முடிவாக இருக்காது, அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஒரே நேரத்தில் இரு அவைகளுக்கும் தேர்தல் நடத்தும்போது, நிதி மற்றும் மனித ஆற்றல் மிச்சப்படும். எந்நேரமும் தேர்தல் என்கின்ற நிலை மாறும் என்கின்றனர். ஆனால் அது சரியாக இருக்காது. தமிழகத்தில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், 2021-ம் ஆண்டு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. 2021 முதல் 3 ஆண்டு இடைவெளி விட்டே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.
1998-ம் ஆண்டு ஒரு தேநீர் விருந்தில் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. அதுபோல மத்திய அரசு கவிழ்ந்தாலோ அல்லது மாநில அரசுகள் கலைக்கப்பட்டாலோ மறுபடியும் அதற்கு எப்போது தேர்தல் நடத்துவது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. அதனால் வீண் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
உரிய விளக்கம்
ஈரோட்டை சேர்ந்த வக்கீல் கே.பூபதி சுந்தரம்:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறை வரவேற்க கூடியதுதான். நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை வேண்டும். ஆனால், அறிவிக்கக்கூடிய திட்டம் அல்லது வரக்கூடிய மாற்றம் ஒட்டு மொத்த மக்களின் நலன் சார்ந்ததா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமாகிறது. இதற்காக தனித்தனியாக அந்தந்த மாநிலங்களில் சுதந்திரமான எந்த சார்பும் இல்லாத ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அவர்கள் அந்த மாநிலத்தின் ஒட்டு மொத்த பரப்பிலும் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து இதுதொடர்பான ஒரே கருத்து இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
உரிய விளக்கங்கள் அளித்து, இந்தியாவின் தலைநகரில் இருந்து கடைக்கோடி மாநிலத்தில், கடைக்கோடி மாவட்டத்தில், கடைக்கோடியில் எழுத்தறிவு இல்லாத ஒரு கிராமத்தை சேர்ந்தவருக்கும் இதுசார்ந்த விளக்கம் அளிக்கப்பட்டு அதன்பின்னரே இதுசார்ந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சாதக, பாதகங்கள்
ஈரோட்டை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ஆர். சுப்ரமணியம்:-
பா.ஜ.க. ஆளும் மத்திய அரசு தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த கொள்கையை இன்றைய பொருளாதார பிரச்சினையோடு சிந்தித்து பார்த்தால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இதனால் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆகும் பெரும் செலவு மிகவும் குறைவதோடு பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டை நாடும் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு முன்கூட்டியே நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்த கமிட்டி ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இன்றைய நாட்டுக்கு அவசியமானதுதான். தேர்தல் சட்டங்களில் இது சம்பந்தமாக திருத்தம் கொண்டு வரலாம் என்று இறுதி அறிக்கையை கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.
அந்த குழு கொடுக்கும் அறிக்கையை அப்படியே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து முன்னாள் ஜனாதிபதி கமிட்டியே இதற்கு ஒப்புதல் தந்து விட்டது என குறிப்பிட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் நாட்டில் எதிர் கட்சிகள் ஆளும் அரசுகள் கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அது ஏற்படுத்தும் தாக்கங்கள் சாதக, பாதகங்கள் குறித்து பெரிய அளவில் விவாத பொருளாக மாறும்.
கருத்து கேட்டு கலைக்கலாம்
ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் சி.எஸ்.கவுதமன்:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை பெற்ற பா.ஜனதா கட்சி ஆட்சி நிறைவு பெறும் நேரத்தில் இந்த கோஷத்தை முன்வைக்கிறது. இது பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடந்தால் மீதமுள்ள ஆண்டுகள் அந்த மாநிலத்தில் கவர்னர் ஆட்சியா? அல்லது மீண்டும் ஒரு தேர்தலா? என்று விளக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் தனித்தனியாக மக்கள் அணுகியதால் ஒரே நேரத்தில் இந்த தேர்தல் நடந்தால் மத்திய, மாநில அரசுகளை தேர்வு செய்வது குறித்து மக்களிடம் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், தேர்தல்களும் ஒன்றாக நடக்கும்போது தேசிய கட்சிகளின் பலத்துக்கு ஈடாக மாநில அளவிலான சிறிய கட்சிகள் தங்களை எப்படி பிரதிநிதிப்படுத்த முடியும்? குறிப்பாக மாநில பிரச்சினையை எடுத்துச்சொல்ல வாய்ப்பு குறைவாகவே இருக்கும். இது குறித்தெல்லாம் விவாதம் ெசய்ய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை விரிவுப்படுத்தி, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான உறுப்பினர்களை நியமித்து விவாதிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு (2024) நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வேண்டுமானால், 4 ஆண்டுகளுக்கு மேல் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அரசுகளை அந்தந்த மாநிலங்களின் கருத்துகளை கேட்டு களைத்துவிட்டு ஒன்றாக தேர்தல் நடத்தலாம்.
இன்னல்கள் குறைவு
ஈரோட்டை சேர்ந்த கொங்கு ஆய்வு மைய துணை நிறுவனரும், சமூக ஆர்வலருமான ஜெயமோகன்:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சாத்தியமா? என்பதைவிட நல்லதா? கெட்டதா? என்றுதான் பார்க்க வேண்டும். நிதி மேலாண்மையை பொறுத்தவரையில் மிக சிறப்பான திட்டம்தான். மக்களுக்கும் தேர்தலின்போது ஏற்படும் இன்னல்கள் குறைகிறது. அதேசமயம் சட்ட ரீதியாக அணுகும்போது நல்லதைவிட தீமைதான் அதிகமாக இருக்கும். மாநில அளவிலான சட்டத்துக்கும், தேசிய அளவிலான சட்டத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. மாநிலத்துக்கான முக்கியத்துவம் குறையும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்குள் மாநில அரசுகள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அப்போது மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்துக்கு மாநில அரசுகள் ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.