< Back
மாநில செய்திகள்
ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?

தினத்தந்தி
|
6 May 2023 12:05 AM IST

‘எத்தனை நாளா சொல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!' ‘நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!' இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும்.

கவுண்ட்டர்களில்...

முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப் பின்பற்றி வந்தனர்.

இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

கூடுதல் செலவு ஏற்படும்

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் தனபதி:- ஆயிரம் ரூபாய்க்கும் மேல் மின் கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்பது நகரப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது சற்று சிரமம் தான். மின் கட்டணம் செலுத்துவதற்காக கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் நெட் பேங்கிங் வசதி இல்லாதவர்கள் கணினி சேவை மையத்தை தேடிச்செல்ல நேரிடும். அப்போது அங்கு இதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பார்கள். இதனால் கூடுதல் செலவு தான் ஏற்படும். செல்போனில் செயலி வைத்திருப்பவர்கள் எளிதில் மின்சார கட்டணம் செலுத்திவிடலாம்.

கவுண்ட்டர் வசதி

ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் இயக்கத்தின் நுகர்வோர் விவகாரத்துறை மாநில பொறுப்பாளர் கனகராஜ்:- ஆன்லைனில் மட்டும் தான் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்க கூடாது. ஆன்லைன் மட்டுமில்லாமல் மின்சார வாரிய அலுவலகங்களில் கவுண்ட்டர்களில் நேரடியாகவும் மின்சார கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு இருக்க வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க, செலுத்த ஏ.டி.எம்.கள் வசதி இருந்தாலும், நேரடியாகவும் பணப்பரிமாற்ற நடவடிக்கை உள்ளது. அதுபோல மின்சார கட்டணம் செலுத்தும் முறையும் இருக்க வேண்டும்.

ஸ்மார்ட் போன்

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜமால் முகைதீன்:- தமிழக அரசு தற்போது ஆயிரம் ரூபாய்க்கு மேலாக மின் கட்டணம் வந்தால் அந்த தொகையை மின்சார வாரியத்தில் செலுத்த இயலாது என்றும் இணையதள வாயிலாக தான் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஏனெனில் மின் கட்டணம் செலுத்த மின்சார வாரியத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. தற்போது அனைவருடைய கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. எனவே மின்கட்டணத்தை எளிதாக செலுத்தி விட முடியும்.

சாமானியர்கள் பாதிப்பு

கறம்பக்குடியை சேர்ந்த முகமதுஜான்:- ஆயிரம் ரூபாய்க்கும் மேல் மின் கட்டணம் இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு கிராம பகுதிகளில் உள்ள நடுத்தர குடும்பத்தினர், சிறு வியாபாரிகள் போன்றவர்களை வெகுவாக பாதிக்கும். மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சில அத்தியாவசிய மின்சாதன பொருட்களை பயன்படுத்தினாலே கட்டணம் ஆயிரத்தை தாண்டி விடுகிறது. இந்த அறிவிப்பால் தனியார் இணைய சென்டர்களுக்கு சென்று சேவை கட்டணமும் சேர்த்து செலுத்தும் நிலை உருவாகும். சில அரசு அலுவலகங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவை வாடகை கட்டிடத்தில் தான் செயல்படுகிறது. மின்வாரிய ரசீது மட்டுமே தணிக்கையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த அறிவிப்பால் குளறுபடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இணைய வழி நிதி பரிவர்த்தனையில் பல முறைகேடுகள் நடப்பதால் பலரும் இணைய வங்கி சேவையை பெறாமல் உள்ளனர். எனவே சாமானியர்களின் நலன் கருதி மின்கட்டண தொகை செலுத்தும் பழைய நடைமுறையே தொடர வேண்டும்.

கல்வியறிவு இல்லாத மக்கள்

வடகாடு பகுதியை சேர்ந்த ஆசிரியர் பாக்கியராஜ்:- முன்பு எல்லாம் மின்கட்டணம் செலுத்த வேண்டியது இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு இளைஞர்கள் தங்கள் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இத்திட்டம் படித்தவர்களுக்கு சாதகமான ஒன்றாக தெரிந்தாலும், ஏழை, எளிய மக்கள் மற்றும் கல்வியறிவு இல்லாத மக்களுக்கு பாதகமாகத்தான் தெரிகிறது. வளர்ந்து வரும் நவீன காலத்திற்கு ஏற்ப அரசு கொண்டு வரும் பல நல்ல திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடைய இன்னும் சில காலம் ஆகலாம்.

கூட்டத்தை குறைக்க...

மின்சார வாரிய அதிகாரிகள்:- ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணம் ஆன்லைனில் செலுத்தும் முறையானது மின் நுகர்வோர்களுக்கு வசதியாக தான் இருக்கும். கவுண்ட்டர்களில் நேரடியாக பணம் செலுத்துவதில் கூட்டத்தை குறைப்பதற்காகவும், மக்கள் காத்திருக்கும் நேரத்தை தவிர்ப்பதற்காகவும் இந்த முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்