< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?

தினத்தந்தி
|
3 Nov 2022 12:19 AM IST

ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவது போல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

காகித பணம்

பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.

அதன்பின்னர் 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.

ரூபாய் நோட்டுகள்

இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.

இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.

லட்சுமி, விநாயகர் உருவப்படம்

இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-

உள்நோக்கத்துடன் சொல்லியிருக்கலாம்

பொருளாதார விமர்சகர் சோம.வள்ளியப்பன்:-

பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்பெருக்கத்துக்கும், லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்பிக்கை ரீதியில் அவர் சொல்லியிருக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் நன்கு படித்தவர். அவர் வேறு ஒரு உள்நோக்கத்துக்காக தான் இதை சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். உலகத்தில் முன்னேறிய நாடுகள் கூட இப்படி முயற்சித்தது கிடையாது. மதிப்புமிக்க, வணங்கக்கூடிய இறைவனை இப்படி பயன்படுத்துவது சரியாக இருக்காது. மற்ற மதத்தினரும், இப்படி தங்கள் கடவுளை அச்சிடச் சொன்னால் என்ன செய்வார்கள்?. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்வதாகவே நான் கருதுகிறேன். இதன்மூலம் வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அதுவும் நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.

பணத்தின் மதிப்பை உயர்த்த ஆலோசனை

சிவகாசியை சேர்ந்த டேனியல்:- இந்தியாவில் அனைத்து மத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வரும் நிலையில் ரூபாய் நோட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த கடவுள்கள் படத்தை அச்சிட்டால் மற்றவர்களும் தங்கள் மதத்தை சேர்ந்த கடவுளின் படங்களை அச்சிட வலியுறுத்துவார்கள். இது தேவையில்லாத சர்ச்சையை உரு வாக்கும். அதனால் எப்போதும் போல தேச தந்தை மகாத்மா காந்தியின் படத்தை மட்டும் ரூபாய் நோட்டுகளில் அச்சிடலாம். சிவகாசியில் மளிகைகடை, டீ கடைகள், மருந்துக்கடை, சிகை அலங்கார நிலையம், இளநீர் விற்பனை செய்யும் இடம் என எல்லா இடங்களிலும் கூகுள்பே, போன்பே போன்றவைகள் மூலம் பணத்தை செலுத்தி வருகிறார்கள். எனவே யார் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிடலாம் என்று யோசிப்பதை விட பணத்தின் மதிப்பை உயர்த்த தேவையான ஆலோசனையை வழங்க வேண்டும்.

டிஜிட்டல் பரிவர்த்தனை

விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவகுருநாதன்:-

இந்தியா மத சார்பற்ற நாடு. இன்று உலக அளவில் பெருமையுடன் பேசப்படும் நிலையில் ரூபாய் நோட்டில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த தெய்வத்தின் படத்தை அச்சடிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. தனி மனிதனாக இதை நான் வரவேற்றாலும் இந்திய குடிமகனாக இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விருதுநகரை சேர்ந்த பொருளியல் நிபுணர் டாக்டர் வைரமுத்துவேல்:-

மதச்சார்பற்ற நாட்டில் இம்மாதிரியாக தெய்வங்களின் படத்தை ரூபாய் நோட்டில் இடம்பெற செய்வது என்பது ஏற்புடையதல்ல. நியாயமும் அல்ல. விதிமுறைகளும் அதை அனுமதிக்காது. தேவையற்ற பிரச்சினையை இது உருவாக்கும் என நினைக்கின்றேன்.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரி கண்ணன்:-

பண புழக்கத்தை குறைக்க மத்திய அரசு தற்போது டிஜிட்டல் கரன்சி மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையையும், டிஜிட்டல் பரிவர்த்தனையும் ஊக்கப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படம் போடப்படும் என்பது சாத்தியப்படாது.

உழைப்பாளர்கள் சிலை

கவிஞர் திலகபாமா:- இந்திய நாட்டின் அடையாளமாக உள்ள ரூபாய் நோட்டில் இந்து கடவுள்களின் படம் இடம் பெற வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுமை தன்மையுடைய ரூபாய் நோட்டில் உழைப்பாளர்கள் சிலை படம் அச்சிடுவது பொருத்தமான ஒன்றாகும். உழைக்கின்ற மக்களின் கைகளில் சேராத ரூபாய் தாளில் குறைந்தபட்சம் உழைப்பாளர்கள் படமாவது இருக்கட்டும்.

மேலும் சிலர் கூறுகையில், 'ஏற்கனவே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், வீட்டில் விளக்கு (லைட்) எரியவிட்ட பிறகு் ரூபாயை கொடுப்பதற்கு தயங்குவார்கள். அப்படி இருக்கும்போது, ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சிட்டால், பலரின் மனநிலையை சொல்லவா வேண்டும்?' என்றனர்.

மேலும் செய்திகள்