இறந்த மனிதனை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா? – நீதிபதிகள் கேள்வி
|நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மதுரை,
சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டேர் விஸ்தீரணத்தில் நீர் நிலை ஒன்று உள்ளது. இந்த நீர்நிலைக் கண்மாய் விவசாயத்திற்கு மற்றும் அப்பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்த நீர்நிலையில் ஆக்கிரமித்து உள்ளாட்சி அமைப்பு சார்பில் தகன மேடை அமைக்க உள்ளனர். நீர் நிலையில் தகன மேடை அமைக்க கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சிவகாசி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள நீர்நிலை கண்மாயில் தகனமேடை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்யவதில் கூட பிரச்சனையா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், நீர்நிலை என கூறி மனுதாரர் கூறியுள்ள இடம் வகைப்படுத்தப்படவில்லை எனவும் அதற்கு முன்னதாக நீர்நிலை என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டதை நீதி மன்றம் ஏற்காது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர்.