< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் பஸ் நிலையத்தில்   வாலிபரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல்  ஹவாலா பணமா? போலீசார் தீவிர விசாரணை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் ஹவாலா பணமா? போலீசார் தீவிர விசாரணை

தினத்தந்தி
|
22 Oct 2022 12:15 AM IST

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் காட்டுமன்னார்கோவில் வாலிபரிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அந்த பணம் ஹவாலா பணமா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி படித்து வரும் மற்றும் வேலை செய்து வருபவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பஸ்களில் நேற்று முதல் புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர்.

இதன் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

ரூ.11 லட்சம் பறிமுதல்

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் கட்டுக்கட்டுகளாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் எண்ணிப்பார்த்ததில் ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என்பது தெரிந்தது. மேலும் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. இதனால் அது ஹவாலா பணமாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்ததோடு இதுபற்றி விழுப்புரம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கட்டுகளாக பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்