< Back
மாநில செய்திகள்
கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?

தினத்தந்தி
|
11 Nov 2022 12:20 AM IST

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

கல்வி தொலைக்காட்சி

முதலில் சில குறிப்பிட்ட பாடங்கள் மாணவ-மாணவிகளுக்கு வீடியோவாக பதிவிடப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில், கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேருதவியாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தங்களது கற்றலை வலுப்படுத்தி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு கல்வி தொலைக்காட்சி தான். அதன் வாயிலாகவும், கல்வித்துறையின் சீரிய முயற்சியாலும் மாணவர்களின் கற்றல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது.

செயல்பாடுகளில் மாற்றம்

ஆரம்பத்தில் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆசிரியர்களை கொண்டு வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமைகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் இசை, மனநல ஆலோசனை உள்பட துணைக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.

தொலைக்காட்சி வாயிலாக மட்டுமல்ல, அதில் ஒளிபரப்பாகும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சி யூ-டியூப் வாயிலாக அதற்கு மறுநாள் பார்க்கும் வகையில் பதிவேற்றமும் செய்யப்பட்டன. கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காலம் வரை கல்வி தொலைக்காட்சி மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதன்பின்னர், நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும், கல்வி தொலைக்காட்சியின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பயனுள்ளதாக உள்ளதா?

அதன்படி, தற்போது கல்வி தொலைக்காட்சியில் கொரோனா காலத்தில் வெளியிடப்பட்டது போன்ற பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பான வீடியோக்களும், காலை மற்றும் மாலையில் வேலைவாய்ப்பு தொடர்பான வீடியோக்களும், இதுதவிர மற்ற நேரங்களில் பாடங்கள் குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதுதான் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகளாக இருக்கிறது. இருப்பினும், கல்வி தொலைக்காட்சி கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? அதை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

வீட்டுப்பாடம்

பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தொட்டியான்:- கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் நேரங்கள் தற்போது மாணவர்களுக்கு உகந்ததாக இல்லை. மாணவர்கள் பார்க்கும் வகையில் நேரம் இருப்பின் பயனுள்ளதாக அமையும். மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்வதில் ஆர்வம் காட்டுவதால் கல்வி தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வம் குறைகிறது. கல்வி தொலைக்காட்சி பார்க்கும் நேரம் கிடைப்பது மிக குறைவு. பள்ளிகளில் வாய்ப்பு கிடைக்கும் போது கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டால் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

கூடுதல் அனுபவம்

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ஜுணைத்:- கல்வி தொலைக்காட்சி மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. பொதுவாக மாணவர்களுக்கு தொலைக்காட்சி பார்ப்பது இயல்பாகவே பிடிக்கும். தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பது கூடுதல் அனுபவமாக உள்ளது. பள்ளி கூடத்தில் இருக்கிறோம் என்ற பயம் இல்லாமல் பாடங்களை கற்க முடிகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் பயனை தருகிறது. கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை எளிய முறையில் நடத்துவதால் மாணவர்களுக்கு நன்கு புரிகிறது. மேலும் வீட்டிலிருந்து கொண்டு பாடங்களை தொலைக்காட்சி மூலம் கற்பதால் சந்தேகங்களை பெற்றோரிடம் கூச்சம் இல்லாமல் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா பாதிப்பு

வேப்பந்தட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தர்ஷினி:-

கல்வி தொலைக்காட்சி மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் பாடங்களை நடத்தி வருகிறது. வீட்டில் பெற்றோர்களுடன் அமர்ந்து கொண்டு பாடம் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வது புது விதமான அனுபவத்தை தருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தபோது கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக பயின்றது மறக்க முடியாதது. வகுப்பில் அமர்ந்து படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. தற்போது காலையிலேயே பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் வீட்டிற்கு வருவதால் சரியான நேரத்தில் கல்வி தொலைக்காட்சியில் நடத்தக்கூடிய பாடங்களை பார்க்க முடியவில்லை. இருப்பினும் விடுமுறை நாட்களில் கல்வி தொலைக்காட்சியை பார்த்து பாடங்களை கற்று வருகிறேன்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்

குன்னம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் கார்த்திக்:- கொரோனா காலத்தில் நாங்கள் வீட்டிலேயே இருந்ததால் கல்வி தொலைக்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பள்ளியில் நாங்கள் தொடர்ச்சியாக பாடம் படித்தும் வீட்டுப்பாடங்கள் படித்து எழுதுவதாலும் எப்போதும் கற்றல் செயலில் நாங்கள் ஈடுபடுவதால் கல்வி தொலைக்காட்சியை பார்க்க நேரம் கிடைக்கவில்லை. மாலை நேரங்களில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பது கடினம். அனைத்து வீடுகளிலும் பெற்றோர்கள் டி.வி.யில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலே பார்க்க ஆர்வமாக உள்ளதாலும் கல்வி தொலைக்காட்சி பார்க்க இயலவில்லை. மாலையில் வீட்டுப்பாடம் செய்யவும், இல்லம் தேடிக்கல்வி வகுப்பில் கற்கவும் நேரம் சரியாக உள்ளது. பள்ளிகளில், கல்வி தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பப்பட்ட பதிவு நிகழ்ச்சிகளையே நேரம் கிடைக்கும் போது நாங்கள் பார்க்கிறோம்.

நேரமில்லை

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் நிஷா:- தமிழக அரசு சார்பில் டி.வி.யில் ஒளிப்பரப்பப்பட்டு வந்த கல்வி தொலைக்காட்சி கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் பாடங்களை கற்பிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுவதால் ஆசிரியர்கள் நேரிடையாக பாடங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் வீட்டு பாடங்களை, வீட்டில் இருந்து படிப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இதனால் தற்போது டி.வி.யில் கல்வி தொலைக்காட்சி பார்க்க நேரமில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எதிர்பார்த்த அளவு இல்லை

சில தனியார் பள்ளி முதல்வர்களை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, 'அரசின் இந்த திட்டம் சிறப்பானதுதான். ஆனால் அதனை செயல்படுத்தும் முறைதான் எதிர்பார்த்த அளவு இல்லை. உதாரணமாக ஆங்கிலத்தில் ஒரு பாடத்தை எடுக்கும் ஆசிரியர் அதில் உள்ள முன்கருத்துகளை விளக்கமாக கூறாமல், நேரடியாக பாடப்புத்தகத்தின் பக்கத்தை கூறி பாடம் நடத்துகிறார். இதனால் மாணவர்கள் அதில் அக்கறை காட்டுவது கிடையாது.

மேலும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே இதை முறைப்படுத்தி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தலாம்' என்று கூறினர்.

இந்த நிலையில் இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கல்வித் தொலைக்காட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது என்றும், இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை விரைவில் வெளியிட உள்ளது' என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்