< Back
மாநில செய்திகள்
கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?
அரியலூர்
மாநில செய்திகள்

கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?

தினத்தந்தி
|
11 Nov 2022 12:18 AM IST

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

கல்வி தொலைக்காட்சி

முதலில் சில குறிப்பிட்ட பாடங்கள் மாணவ-மாணவிகளுக்கு வீடியோவாக பதிவிடப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில், கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேருதவியாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தங்களது கற்றலை வலுப்படுத்தி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு கல்வி தொலைக்காட்சி தான். அதன் வாயிலாகவும், கல்வித்துறையின் சீரிய முயற்சியாலும் மாணவர்களின் கற்றல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது.

செயல்பாடுகளில் மாற்றம்

ஆரம்பத்தில் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆசிரியர்களை கொண்டு வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமைகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் இசை, மனநல ஆலோசனை உள்பட துணைக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.

தொலைக்காட்சி வாயிலாக மட்டுமல்ல, அதில் ஒளிபரப்பாகும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சி யூ-டியூப் வாயிலாக அதற்கு மறுநாள் பார்க்கும் வகையில் பதிவேற்றமும் செய்யப்பட்டன. கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காலம் வரை கல்வி தொலைக்காட்சி மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதன்பின்னர், நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும், கல்வி தொலைக்காட்சியின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பயனுள்ளதாக உள்ளதா?

அதன்படி, தற்போது கல்வி தொலைக்காட்சியில் கொரோனா காலத்தில் வெளியிடப்பட்டது போன்ற பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பான வீடியோக்களும், காலை மற்றும் மாலையில் வேலைவாய்ப்பு தொடர்பான வீடியோக்களும், இதுதவிர மற்ற நேரங்களில் பாடங்கள் குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதுதான் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகளாக இருக்கிறது. இருப்பினும், கல்வி தொலைக்காட்சி கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? அதை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

கலந்துரையாடல்

அரியலூர் மாவட்டம் பள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி:- கல்வி தொலைக்காட்சியில் கல்வியாளர்களின் கலந்துரையாடல், நுழைவு தேர்வு குறித்து விளக்கங்கள், புதிய முறையில் கற்றல் கற்பித்தல், ஒவ்வொரு படங்களிலிருந்தும் வல்லுனர்களின் கருத்துக்கள் ஒளிபரப்பாவதால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கல்வி தொலைக்காட்சியானது வீட்டில் ஒரு வகுப்பறை போன்று செயல்பட்டு வருகிறது.

கற்றலை மேம்படுத்த உதவுகிறது

அரியலூர் மாதிரி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிபாஸ்கர்:- அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வீடுகளில் கணினி மற்றும் இணையதள வசதி இல்லாத எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு பாடங்கள் மற்றும் பாடப்பொருள் சார்ந்த விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கும், கற்றலை மேம்படுத்த உதவும் வீடியோக்களை பார்ப்பதற்கும் கல்வி தொலைக்காட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

நிச்சயம் எங்களின் கற்றலை மேன்மைப்படுத்திக் கொள்ள கல்வி தொலைக்காட்சி உதவுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே கல்வி தொலைக்காட்சிக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிவு சார்ந்த விஷயங்கள்

அரியலூர் மாதிரி பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹர்சதா:- ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களை வீட்டிலிருந்து அப்படியே கல்வி தொலைக்காட்சி மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் அந்நிகழ்ச்சியை திரும்பத் திரும்ப பார்ப்பதின் மூலம் தெளிவாக கற்றுக் கொள்ள முடிகிறது. விதவிதமான புதுப்புது அறிவு சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எதிர்பார்த்த அளவு இல்லை

சில தனியார் பள்ளி முதல்வர்களை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, 'அரசின் இந்த திட்டம் சிறப்பானதுதான். ஆனால் அதனை செயல்படுத்தும் முறைதான் எதிர்பார்த்த அளவு இல்லை. உதாரணமாக ஆங்கிலத்தில் ஒரு பாடத்தை எடுக்கும் ஆசிரியர் அதில் உள்ள முன்கருத்துகளை விளக்கமாக கூறாமல், நேரடியாக பாடப்புத்தகத்தின் பக்கத்தை கூறி பாடம் நடத்துகிறார். இதனால் மாணவர்கள் அதில் அக்கறை காட்டுவது கிடையாது.

மேலும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே இதை முறைப்படுத்தி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தலாம்' என்று கூறினர்.

இந்த நிலையில் இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கல்வித் தொலைக்காட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது என்றும், இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை விரைவில் வெளியிட உள்ளது' என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்