< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

சமையல் கியாஸ் சிலிண்டர் உரிய நேரத்தில் கிடைக்கிறதா?

தினத்தந்தி
|
5 Jun 2023 12:15 AM IST

சமையல் கியாஸ் சிலிண்டர் உரிய நேரத்தில் கிடைக்கிறதா? என இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

விலை நிர்ணயம்

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் முறையையும் கடைப்பிடித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,068.50-க்கு வினியோகிக்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மானியம் கிடைக்கவில்லை

அதற்கான மத்திய அரசு மானியம் வெறும் ரூ.24 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதுவும் அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்து உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சமையல் கியாஸ் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓரிரு நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் வழங்கப்பட்டு விடுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

சமையல் கியாஸ் சிலிண்டர் உரிய நேரத்தில் கிடைக்கிறதா என்பது குறித்து இல்லத்தரசிகள் கூறியதாவது:-

வரவேற்பு

ராஜபாளையத்தை சேர்ந்த கவுசல்யா:-

ராஜபாளையம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது இல்லை என்பது வரவேற்கத்தக்கது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்த உடன் சிலிண்டர் வந்து விடுகிறது. எனினும் அடிக்கடி கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் சிலிண்டர் விலையை சரியாக கணக்கிட முடிவதில்லை.

சிலிண்டர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும்போது சற்று சிரமப்பட்டு எடுக்க வேண்டி உள்ளது. பெரும்பாலான கியாஸ் சிலிண்டர் துருப்பிடித்த நிலையில் காணப்படுவதால் வீட்டில் வைப்பதற்கு சற்று தயக்கமாக உள்ளது. கியாஸ் சிலிண்டர் கசிவு ஏற்படுவதால் சிலிண்டரை சரி பார்த்து வாங்குவது மிகவும் நல்லது.

விலை குறையுமா?

விருதுநகரை சேர்ந்த இல்லத்தரசி தனலட்சுமி:-

சமையல் கியாஸ் சிலிண்டர் கடந்த காலங்களில் தேவைப்படும் நேரத்தில் பதிவு செய்தாலும் கிடைப்பதற்கு வார கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது காலையில் பதிவு செய்தால் மதியமே டெலிவரி செய்யப்படும் நிலை உள்ளது. இது மிகவும் வசதியாக தான் உள்ளது.

இது தொடர்ந்து நீடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனாலும் இதற்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் என்னை போன்ற நடுத்தர மக்களுக்கு வசதியாக இருக்கும்.

கால தாமதம்

தாயில்பட்டியை சேர்ந்த செல்வலட்சுமி:-

தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் வரை கியாஸ் சிலிண்டர் பதிவு செய்தால் 4 நாட்கள் கழித்து தான் கிடைக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் இதுவரை சிரமம் தெரியவில்லை. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

எனவே சிலிண்டா் பதிவு செய்த உடனேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

சிலிண்டரில் கசிவு

அருப்புக்கோட்டையை சேர்ந்த சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர் அழகு ராஜா:-

அருப்புக்கோட்டையில் கியாஸ் சிலிண்டர் புக் செய்தவுடன் ஓரிரு நாளில் உடனடியாக டெலிவரி செய்யப்படுகிறது. கியாஸ் தட்டுப்பாடு தற்போது இல்லை. இருந்தாலும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி உடனுக்குடன் சிலிண்டர் டெலிவரி செய்து வருகிறோம். சிலிண்டர் டெலிவரி செய்யும் போது அதன் மூடியில் ஏதேனும் கசிவு உள்ளதா? என்பதை சோதித்து டெலிவரி செய்கிறோம்.

சிலிண்டர் மாட்ட முடியாத வயதானவர்களுக்கு நாங்களே சிலிண்டர் மாட்டியும் உதவி செய்கிறோம்.

நடவடிக்கை

விருதுநகரை சேர்ந்த சமையல் கியாஸ் வினியோகஸ்தர் கூறியதாவது:-

தற்போது வாடிக்கையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பதிவு செய்தால் நாங்கள் உடனடியாக டெலிவரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் காலையில் பதிவு செய்தாலும் மதிய நேரமே அவர்களுக்கு டெலிவரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த அளவுக்கு எங்களுக்கும் சமையல் கியாஸ் நிறுவனங்கள் வினியோகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மீது பூரண திருப்தி ஏற்படும் நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தான் எங்களை மேலும் ஊக்குவிக்குகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்