< Back
மாநில செய்திகள்
ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து
சென்னை
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து

தினத்தந்தி
|
7 Nov 2022 11:41 AM IST

ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெண்மை புரட்சி

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

விலை உயர்வு

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் கருத்து

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பால் முகவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

பாதிக்கும்

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நடனப்பள்ளி ஆசிரியை லதா சுகுமார்:- வணிகரீதியான பயன்பாட்டுக்கு வினியோகிக்கும் பால் விலையை ஏற்றுவது என்பது, அடுத்து மக்கள் பயன்பாட்டுக்கான பால் விலையை ஏற்றுவதற்கான முதல்படிதான். அத்தியாவசியப் பொருட்கள், மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு பிறகு இப்போது பால் விலையிலும் உயர்வு எட்டிப்பார்த்திருக்கிறது. இதற்கு பிறகு டீக்கடைகளில் டீ, காபி விலை உயரும். ஆவின் பால் பொருட்களும், இனிப்புவகைகளின் விலையும் உயரும். மக்கள் எப்படி தாங்குவார்கள்? தயவுசெய்து தொடக்கத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பால் விலை உயர்வை ஆவின் கைவிட வேண்டும். இந்த விலை அதிகரிப்பு ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.

டீ, காபி விலை உயரும்

பாரிமுனையைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ராஜீவ்:- கொரோனாவுக்கு பின்னர் இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம். அதற்குள் பல்வேறு சுமைகளை அரசு சுமத்துகிறது. பால் ஒரு லிட்டர் ரூ.12 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆரஞ்சு பால் ஒரு லிட்டர் ரூ.60 ஆகவும், சிவப்பு பால் ஒரு லிட்டர் ரூ.68 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த தொகைக்கு பால் வாங்கி, தரமான டீயை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியுமா? பால் விலை உயர்வு சங்கிலித்தொடர் போல எல்லா விலையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். பாலின் விலை உயர்வு திரும்பப்பெறப்படாத பட்சத்தில், நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக டீ, காபியின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.

எங்களுக்கு ரூ.60, அவர்களுக்கு ரூ.46?

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எம்.கமாலுதீன்:- ஆவின் நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் பால் விலையை ஏற்றி, முகவர்களை சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.12 உயர்வு என்பது மிகவும் கடினமானது. பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.46-க்கும், முகவர்களுக்கு ரூ.60-க்கும் கொடுக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தபின்னர் பால் விலையில் ரூ.3 குறைத்துவிட்டு, இப்போது அதில் இருந்து 4 மடங்கு உயர்த்திவிட்டார்கள். எனவே உயர்த்திய விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் தலையில் சுமை

திருவொற்றியூரைச் சேர்ந்த கிறிஸ்டியனா:- மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத பொருட்கள் விலை ஏறுவது நிச்சயம் கவலைக்குரியதுதான். வசதி படைத்தவர்கள் ஊக்கத்துக்கு சத்து நிறைந்த பானங்களை அருந்துகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள், பாமர மக்கள் டீ, காபியைத்தான் அதிகம் பருகுகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இதற்கு செலவு செய்கிறார்கள். இந்த நிலையில் வணிகரீதியான பால் விலையை இவ்வளவு அதிகரித்திருப்பது டீ, காபி விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இந்த சுமை பாமர மக்களின் தலையில்தான் ஏற்றிவைக்கப்படும்.

பணம் சம்பாதிக்க...

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி:- ஆவின் நிறுவனத்துக்கும், பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை சொற்ப அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது. அதை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற எங்கள் நீண்டகால கோரிக்கையை கண்டுகொள்ளாமல் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது ஆவின் நிர்வாகம்.

நிறைகொழுப்பு பாலுக்கு (ஆரஞ்சு) மாதாந்திர அட்டைக்கு தவிர்த்து, விற்பனை விலையை உயர்த்தியிருப்பது ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனை அளவை குறைக்கவே என்பதும், மாதாந்திர அட்டைக்கும், சாதாரண விற்பனைக்கும் லிட்டருக்கு ரூ.14 வித்தியாசம் வைத்திருப்பது ஆளுங்கட்சி பிரமுகர்கள், ஆவின் மொத்த வினியோகஸ்தர்கள், ஆவின் மண்டல அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் முறைகேடாக பணம் சம்பாதிக்கத்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

திரும்பப்பெற வேண்டும்

கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி:- சொத்துவரி உயர்வு, மின்சார கட்டண உயர்வைத் தொடர்ந்து மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அடுத்த பேரிடி, பால் விலை உயர்வு. நாங்கள் அன்றாடம் வேலை செய்து, பிழைப்பு நடத்துகிறோம். மளிகை சாமான்கள், காய்கறிகள், பிள்ளைகளின் படிப்பு செலவு என பல்வேறு செலவினங்கள் இருக்கின்றன. மாதத்துக்கு இவ்வளவு செலவு இருக்கும்போது, கூடுதல் சுமையாக பால் விலை உயர்வும் இப்போது எங்கள் மீது விழுந்திருக்கிறது. ஒரு லிட்டர் பாலை ரூ.60 கொடுத்து வாங்க முடியுமா? எனவே அரசு உடனடியாக விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை

திருநின்றவூர் பாக்கத்தைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் நயினார் முகமது:- ஓட்டல்கள், டீக்கடைகள் பயன்படுத்தும் பாலின் விலை மட்டும்தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் ரகங்களின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. இதனால் பால் விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. டீக்கடை, ஓட்டல்களுக்கு மட்டும் சற்று பாதிப்பு இருக்கும் என்பது உண்மை. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

உங்களுக்கு தெரியுமா?

சர்வதேச அளவில் சத்தான உணவாக கருதப்படும் பாலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும், பால்வளத்துறையை கொண்டாடுவதை உறுதிசெய்யும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந் தேதி சர்வதேச பால் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் சர்வதேச பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளான நவம்பர் 26-ந்தேதி தேசிய பால் தினமாக அனுசரிக்கப் படுகிறது.

மேலும் செய்திகள்