ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா? - நீதிபதி ஆறுமுகசாமி பதில்
|ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா? என்ற கேள்விக்கு நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.
தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை விரைவில் சட்டமன்றத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்த பின் நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
154 சாட்சியங்களிடம் விசாரித்துள்ளோம். விசாரணை தொடங்கி 1 ஆண்டுக்குள் 149 சாட்சிகளை விசாரித்தோம். இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் வைத்தபோது, இந்த ஆணையமானது ஒரு கோர்ட்டு போல செயல்பட்டுள்ளது என பாராட்டியது. ஒரு ஆண்டுக்குள் அனைத்து சாட்சியத்தையும் விசாரித்துவிட்டோம் என்பது தான் உண்மை.
ஜெயலலிதா மரணம் மர்மமானதா? என்பது குறித்து அறிக்கையில் தான் கூறமுடியும். ஆங்கிலத்தில் 500 பக்கம், தமிழில் 608 பக்கம் அறிக்கையில் உள்ளது. 3 பகுதிகள், சாட்சியங்களின் சுருக்கத்தன்மை ஆகியவற்றை கொடுத்துள்ளோம். அறிக்கையை வெளியிடலாமா? என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்யவேண்டும்.
வழக்கில் சசிகலாவுக்கு சம்மன் கொடுத்தோம். பின்னர் நேரில் ஆஜராக வாய்ப்பு கொடுத்தும். அவர் தான் விசாரணைக்கு ஆஜராகவில்லை என எழுதிக்கொடுத்தபின்னர் நான் ஒருவரை கட்டாயப்படுத்துவது கோர்ட்டு நடைமுறையில் சரியாக இருக்காது. அவர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார்.
சசிகலா தான் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என கூறினார். இதை நான் எழுத்துப்பூர்வமாக வாங்கிக்கொண்டேன்.
விசாரணை 13 மாதம் நடந்துள்ளதே தவிர 4 ஆண்டுக அல்ல. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை தான் வழங்கப்பட்டதா? என்பது குறித்த கேள்விக்கு விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளேன்.
இந்த விசாரணை அறிக்கையில் எதையும் விட்டுவைக்கவில்லை. அனைத்திற்கும் பதில் அளித்துவிட்டேன்.
ஆணையம் யாரையாவது சந்தேகப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதில் அறிக்கையில் உள்ளது. இது குறித்து பதில் அளித்தால் அறிக்கையை வெளியே சொல்வதுபோன்றதாகும்.
எய்ம்ஸ் உங்களிடம் தாக்கல் செய்த அறிக்கை வெளியே வந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நீதிபதி ஆறுமுகசாமி, அதை அங்கு ஒருவர் செய்கிறார். அவரால் முடிகிறது செய்கிறார். விளம்பர யுக்திக்காக செய்கிறார். அதை நான் என்ன கூற முடியும்.
நாம் ஏன் சென்னையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையை மட்டும் கூப்பிட்டு விசாரித்தோம் ஏனென்றால் அந்த மருத்துவமனையில் தான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை துணைக்கு டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்துக்கொண்டனர். எய்ம்ஸ் குழுவினர் 5 முறை வந்தனர். 5 அறிக்கை கொடுத்தனர்.
5 அறிக்கையிம் ஜெயலலிதா உயிரிழந்து 5 மாதங்கள் கழித்து கொடுத்தனர். இது 6-வது அறிக்கை. சரி அவ்வளவு தான்.
இப்போது இந்த அறிக்கையில் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று எதாவது கூறினார்கள் என்றால் விசாரணை வளையத்திற்குள் வருவது யார்? சிகிச்சை அளித்த டாக்டர்கள்.
விசாரணைக்கு அப்பல்லோ டாக்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சசிகலா தரப்பும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
விசாரணை அறிக்கையில் நான் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. ஜெயலலிதாவை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல் போய்விட்டனர். அது குறித்து எனக்கு சில கருத்துக்கள் உண்டு.
ஜெயலலிதா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்த முடியுமா என்று பார்த்தோம். ஆனால், அதற்குள் ஏதேதோ தொடர்ந்து சிறிய சிறிய எப்படி எப்படியோ வந்துவிட்டது. ஆகையால், எதை எதையெல்லாம் இந்த ஆணையம் தவிர்த்துக்கொள்ளலாம் என்று யோசித்தோம்.
வீட்டில் இருந்து ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெயலலிதாவின் உடல்நிலை, அவரது பழக்கவழக்கங்கள், அவர்கள் உடலை எவ்வாறு பார்த்துக்கொண்டனர், யார் அவர் உடல்நிலையை கவனித்தனர் என்பதை எல்லாம் விசாரித்துள்ளோம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் முடிந்த வரையில் அறிக்கையில் பதில் அளித்துள்ளேன். எனக்கு தெரிந்ததை எழுதியுள்ளேன். நான் எழுதியது மிக குறைவு.
சாட்சியம் பற்றி தான் நிறைய கூறியுள்ளேன். என் எதுவுமே எனது கருத்தை தனிப்பட்டு அதிகம் கூறவில்லை.
எய்ம்ஸ் அறிக்கை குறித்து செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கையில் தான் எனக்கு நிறைய யோசனைகள் பிறந்தது. இதேல்லாம் நாம் செய்யவேண்டும் என்று, அதுபடியே உடனடியா அந்த பணியை நிறைவு செய்தேன். என் ஆணையத்திற்கு மட்டும் அதிக பணம் செலவிடப்பட்டதாக விமர்சனம் வந்தது.
அறிக்கையை அரசிடம் கொடுத்துவிட்டேன். அதை நானே கூறமுடியாது. நீங்கள் இத்தனை பேர் காத்திருக்கிறீர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். எனது அறிக்கை திருப்தியாக உள்ளதா? என்பது குறித்து அதை படித்துபார்த்துவிட்டு நீங்கள் தான் கூறவேண்டும்' என்றார்.