தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? அண்ணாமலையோடு நேரடியாக விவாதிக்க தயார் - அமைச்சர் பொன்முடி
|தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம் என்று அண்ணாமலையோடு நான் நேரடியாக விவாதிக்க தயார். அவர் தயாரா? என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலையோடு விவாதிக்க தயார்
விழுப்புரத்தில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. அண்ணாமலையை, நான் நேரடியாக கேட்கிறேன், தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்? மும்மொழிக் கொள்கையை அவர் எதிர்க்க தயாரா? அவர் சென்னையில் எந்த இடத்தில் சொல்கிறாரோ அதே இடத்தில் நேருக்கு நேராக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். அதை பொதுக்கூட்டமாகவோ, இல்லை பட்டிமன்றமாகவோ வைத்து பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா? எனக்கேட்டு சொல்லுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி கல்வி நிறுத்தப்பட்டுள்ளது அது அரசாங்கத்திற்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார். உண்மையாகவே அரசாங்கத்துக்கு தெரியாது. கவர்னருக்குத்தான் தெரியும். அவர்தான், கவர்னருடன் மிக நெருக்கமாக இருக்கிறாரே அவரே கேட்டு சொல்லட்டும்.
தகவல் வரவில்லை
துணைவேந்தர்கள் எல்லோரையும் அழைத்து கூட்டம் போட்டுள்ளார் கவர்னர். ஆனால் நான் இணைவேந்தராக இருக்கிறேன், எனக்கு எந்தவித தகவலும் அளிக்கவில்லை. ஏன் தகவல் அளிக்கவில்லை என அண்ணாமலை கவர்னரை கேட்டு சொல்லட்டும். உண்மையாகவே அந்த கூட்டத்திற்கு எனக்கும் தகவல் வரவில்லை, உயர்கல்வித்துறை செயலாளருக்கும் தகவல் வரவில்லை.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநில கல்விக்கொள்கை குறித்து ஒரு குழு அமைத்துள்ளார். அந்த குழுவின் அறிக்கை விரைவில் வரவிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு கவர்னர், துணைவேந்தர்களை அழைத்து புதிய கல்விக்கொள்கை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசிடம் கலக்காமல் இவ்வாறு கூட்டம் போடுவது யார்? எதற்காக? என்று அண்ணாமலைக்கு தெரியாதா?
அண்ணாமலைக்கு தற்போதைய அரசியலும் தெரியவில்லை, பழைய வரலாறும் தெரியவில்லை.
தமிழ்மொழி மீதான அக்கறை
தமிழ்மொழி வளர்ச்சிக்கு அண்ணாமலை ரொம்ப பாடுபடுவதுபோல் அறிக்கை விடுத்துள்ளார். அவர், புதிய கல்விக்கொள்கையில் மூன்றாவது மொழி திணிப்பதை நிறுத்த வேண்டுமென கவர்னரிடம் முறையிடட்டும். தமிழ்மொழி மீது அக்கறை இருந்தால் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுங்கள் என அனைத்து கோவில்களிலும் சென்று சொல்லட்டும்.
சி.பி.எஸ்.இ. படிப்புகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க சொல்லுங்கள், அப்படி ஆக்கினால் தமிழ்மொழி மீது இவர்களுக்கு அக்கறை உள்ளது என ஏற்றுக்கொள்கிறேன்.
புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்லவற்றை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் மூன்றாவது ஒரு மொழியை கட்டாயமாக்கி திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். நீங்கள் இந்தி மொழியை கட்டாய மொழியாக திணிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.