மதுரை
24 மணி நேர மது விற்பனைதான் திராவிட மாடலா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
|24 மணி நேர மது விற்பனை தான் திராவிட மாடலா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
24 மணி நேர மது விற்பனை தான் திராவிட மாடலா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கலால் வரி மோசடி
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை நிலையங்களை பயன்படுத்தி இன்றைக்கு, ஊழலுக்கான யுக்தியை தி.மு.க. அரசு கையாண்டு வருகிறதோ என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது.பார்கள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர் தொடர்பான, வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பார்கள் உரிமைகளை, அரசு இன்னும் வழங்கவில்லை என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
சட்டவிரோதமாக பார்களில், மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் நேர கட்டுப்பாடு இல்லாமல் விற்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், இந்த துறையின் அமைச்சருக்கு செல்கிறதோ என்று தி.மு.க.வினரே பேசி கொள்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தான் திராவிட மாடலா?.
அரசுக்கு இழப்பு
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.புகார் மனுவும் கொடுத்து இருக்கிறார். தி.மு.க. அரசின் அனைத்து துறைகளிலும் விஞ்ஞான ரீதியான ஊழல்கள் அரங்கேறி கொண்டு இருக்கின்றன. மது உற்பத்தியாளர்கள் கலால் வரியை முறையாக அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர். அதாவது மது பாட்டில்களில் ஹாலோகிராம் அச்சடிக்கப்படாததால், கலால் வரியை செலுத்தப்படாமல் ஏமாற்றுகின்றனர். இந்த மதுபாட்டில்கள் அரசின் கணக்கில் வராமல் சட்டவிரோதமாக நடத்தப்படும் பார்களை சென்றடைகிறது. இதன் மூலம் வரக்கூடிய பணம் முழுவதும் எங்கு செல்கிறது. இது அரசின் கஜானாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.
24 மணி நேரம்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் இன்றைக்கு இந்த மதுபான விற்பனை அதிகரிப்பால், அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது என்றும், அவர்களுடைய வாழ்க்கை சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை வேதனையோடு கூறி உள்ளது. எனவே தமிழக அரசு 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதே போல் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.
24 மணி நேர சேவை என்பது மருத்துவத்திற்கு இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடக்கிறது. எனது திருமங்கலம் தொகுதியில் இது போன்ற நிலை தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.