திருவள்ளூர்
பெரியார் சமத்துவபுர பயனாளிகள் தேர்வில் முறைகேடு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
|பெரியார் சமத்துவபுர பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ள தால் பயனாளிகளின் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் ராம சமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2013-14 ஆம் ஆண்டு பெரியார் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று அங்கு 100 பயனாளிகள் முறைப்படி ஏழைகள், விதவைகள், ஊனமுற்றோர் என வீடற்ற மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஆணையை ரத்து செய்துவிட்டு வேறு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரியவந்தது.
மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் விவரங்களை பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ராம சமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது.
இது பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் பெரியார் சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதை கண்டித்தும், அந்த ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமசமுத்திரம் ஊராட்சி பெரியார் சமத்துவபுரம் பகுதியில் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட ஏழைகளுக்கு சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை தமிழ்நாடு தலித் மக்கள் முன்னணியின் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.