தஞ்சாவூர்
பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் அமைப்பு
|பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் அமைப்பு
தஞ்சை இர்வின்பாலம் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதிய பாலம்
தஞ்சை கல்லணைக்கால்வாயில் இருந்த இர்வின்பாலம் குறுகியதாக இருந்ததாலும், பழைய பாலம் என்பதாலும் அதனை இடித்து விட்டு புதிதாக இரட்டை பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதே போன்று கரந்தையில் வடவாற்றிலும் குறுகிய பாலம் சேதம் அடைந்து இருந்ததால் அதனை அகற்றி விட்டு இரட்டை பாலம் கட்ட முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி 2 இடங்களிலும் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பில் 2 இடங்களிலும் இரட்டை பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு தற்போது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இரும்பு தடுப்புகள் அமைப்பு
இந்த பாலம் பகுதியில் சேதம் அடைந்துள்ள பகுதிகள் பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.தற்போது தண்ணீர் செல்வதால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் இர்வீன்பாலம் பகுதியில் புதிய பாலத்தையொட்டி தடுப்புகள் இல்லாததால் வாகனங்களில் வேகமாக வருபவர்கள் நிலை தடுமாறி விழும் நிலை காணப்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி தடுப்புகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் கீதா, ஒப்பந்தக்காரர் திருமாறன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பாலத்தின் இடதுபுறத்தில் 10 மீட்டர் நீளத்துக்கு இந்த இரும்பு தடுப்புக்கம்பிகள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.