< Back
மாநில செய்திகள்
முட்டுக்காட்டில் மனைவி குழந்தைகள் கண் எதிரே என்ஜினீயர் அடித்துக்கொலை; கார் டிரைவர் கைது
மாநில செய்திகள்

முட்டுக்காட்டில் மனைவி குழந்தைகள் கண் எதிரே என்ஜினீயர் அடித்துக்கொலை; கார் டிரைவர் கைது

தினத்தந்தி
|
5 July 2022 3:48 AM IST

மனைவி, குழந்தைகள் கண் எதிரே என்ஜினீயரை அடித்து கொன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

என்ஜினீயர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரில் வசித்து வந்தவர் உமேந்தர் (வயது 33). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்றுமுன்தினம் காலை தனது குடும்பத்தினருடன் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். அதன் பிறகு பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து உள்ளனர்.

வாக்குவாதம்

பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் காரில் ஏறினர்.

அப்போது டிரைவரான ரவி 'ஓ.டி.பி.' எண்ணை கேட்டுள்ளார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உமேந்தரும், அவரது குடும்பத்தினரும் காரை விட்டு இறங்கினர்.

அடித்துக்கொலை

அப்போது ஆத்திரம் அடைந்த வாடகை கார் டிரைவர் ரவி உமேந்தரை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்த உமேந்தரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கார் டிரைவர் ரவியை கைது செய்தனர். குடும்பத்தினர் கண் எதிரே என்ஜினீயர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்