ஹிஜாப் போராட்டம்; நார்வே, இங்கிலாந்து தூதர்களுக்கு சம்மன் அனுப்பிய ஈரான்
|ஹிஜாப் போராட்டத்திற்கு இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
தெஹ்ரான்,
இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற மாஷா கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. இதுவரை 46 நகரங்களில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பரவியுள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் தங்கள் நாட்டில் நடந்து வரும் போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. அந்த வகையில் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பார்சி மொழி செய்தி நிறுவனம் போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், நார்வே அரசு மீதும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இங்கிலாந்து, நார்வே நாடுகளில் தூதர்களுக்கு ஈரான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.