< Back
மாநில செய்திகள்
ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும்; டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும்; டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
10 May 2023 12:40 AM IST

ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் துணை இயக்குனராக இருப்பவர் பி.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ். இவர் மீது ஒரு பெண் புகார் செய்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி திருமணம் செய்து கொள்வதாகக்கூறி செல்வநாகரத்தினம் ஏமாற்றி விட்டதாகவும், அவரிடம் கேட்டபோது துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், செல்வநாகரத்தினம் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து செல்வநாகரத்தினத்துக்கு விளக்கம் கேட்டு டி.ஜி.பி. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்த நோட்டீசுக்கு தடை கேட்டு செல்வநாகரத்தினம், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், தீர்ப்பாயம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், செல்வநாகரத்தினம் வழக்கு தொடர்ந்தார். அதில், என்னிடம் பணம் பறிப்பதற்காக அந்த பெண் பொய் புகார் செய்துள்ளார். இந்த புகாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமான முறையில் விசாரிக்கவில்லை. எனக்கு எதிரான ஆவணங்களையும் தரவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் ஆகியோர், இந்த வழக்கிற்கு தமிழ்நாடு டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்