சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி: இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கம்
|ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி இன்று ராஜஸ்தானை சந்திக்கிறது.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மல்லுக்கட்டுகின்றன.
உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்திய சென்னை அணி இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இந்த நிலையில், சென்னை - ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசினர் தோட்ட ரெயில் நிலையத்திலிருந்து 1 மணிக்கு கடைசி ரெயில் இயக்கப்படும் எனவும் 5-15 நிமிடங்கள் இடைவெளியில் ரெயிகள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.