கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
|சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.
இந்த நிலையில் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.