கன்னியாகுமரி
பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
|குமரி மாவட்டத்தில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
குளச்சல்:
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தங்க சங்கிலி பறிப்பு
குளச்சல் வண்ணாத்திவிளை நரிக்கல் சாலையை சேர்ந்தவர் சத்தியநேசன். இவருடைய மனைவி ரோஸ்லி (வயது 70). இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து ரோஸ்லி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுபற்றி ரோஸ்லி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சங்கிலி பறித்து சென்ற வாலிபர்களை தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ரோந்து பணியில் ஈடுபட்டார். இரும்பிலி சந்திப்பில் வரும் போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்க போலீசார் சென்ற போது, இருவரும் தப்பியோட முயன்றனர்.
உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேட்டை புன்னபுரத்தை சேர்ந்த வைஷாக் (32), சுனித் (32) என்பதும், மூதாட்டி ரோஸ்லியிடம் நகை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதேபோல் பல பெண்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
அதாவது அவர்கள் குளச்சல், இரணியல், கொல்லங்கோடு, மண்டைக்காடு, கருங்கல், ராஜாக்கமங்கலம் ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளிலும் சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வைஷாக், சுனித் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
25 பவுன் நகை மீட்பு
வைஷாக், சுனித் ஆகிய இருவரும் மொத்தம் 35 பவுன் நகைகளை பறித்ததும் தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 25 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.